மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேற்று, செர்பியாவை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸி ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் பெலாரசை சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா (27) – உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (31) மோதினர்.
துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றிவாகை சூடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில், ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தானுக்காக ஆடி வரும் எலனா ரைபாகினா (26) – அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா (31) மோதினர். முதல் செட்டில் நேர்த்தியாக ஆடிய எலனா, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் பெகுலா சுதாரித்து, ஈடுகொடுத்து ஆடியதால், டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை, 7-6 (9-7) என்ற புள்ளிக் கணக்கில் எலனா ரைபாகினா வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் சபலென்கா – எலனா ரைபாகினா களம் காணவுள்ளனர்.
