கர்நாடக அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

ஓசூர், ஜன.29: கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் ராஜனஅள்ளியைச் சேர்ந்தவர் ஆனந்தா (35). கர்நாடக மாநில அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த 27ம் தேதி அதிகாலை, ஓசூர் பஸ் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டி வந்தார். பின்னர், பஸ்சை பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த தொழிலாளி வேலுசாமி (34) என்பவர், ஓசூர் பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தார். அவரது பை காணாமல் போனதால், பையை தேடிய அவர், டிரைவர் ஆனந்தாவை எழுப்பி உங்கள் பஸ்சின் கதவை திறங்கள். எனது பையை காணவில்லை. உள்ளே சென்று தேட வேண்டும் என்று கூறினார். அதற்கு ஆனந்தா பஸ்சின் கதவை திறக்க முடியாது என்று கூறினார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரம் வேலுசாமி, பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இது குறித்து ஆனந்தா ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வேலுசாமியை கைது செய்தனர்.

Related Stories: