கிருஷ்ணகிரி, ஜன.28: கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தீயணைப்பு துறை சார்பில், கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்தின்போது, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு பாதுகாப்புடன் இருப்பது குறித்தும், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதுகாப்புடன் இருப்பது குறித்தும், பேரிடர் காலங்களில் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், போலி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சுதாராணி தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் அந்தோணிசாமி முன்னிலையில், மாணவர்களுக்கு தீவிபத்து காலங்களில் எவ்வாறு தீயை அணைப்பது, இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த டாமினி என்ற செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து தீயணைப்பு வீரர்கள் விளக்கினர். எண்ணெய் மற்றும் எரிவாயுவினால் ஏற்படும் தீயை அணைப்பது குறித்தும், பல்வேறு வகையான தீயணைப்பான்கள் குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இறுதியில், தலைமை ஆசிரியர் சுதாராணி, தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
