பாம்பாறு அணையில் இருந்து பிப்.13ம் தேதி தண்ணீர் திறப்பு

ஊத்தங்கரை, ஜன.22: ஊத்தங்கரையில் நடந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில், பாம்பாறு அணையில் இருந்து பிப்ரவரி 13ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ், 2025-2026ம் ஆண்டிற்கான பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊத்தங்கரை நீர்வளத்துறை பாசனப் பிரிவு உதவிப் பொறியாளர் பிரபு தலைமை தாங்கினார். அரூர் மேல்பெண்ணையாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்து ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஆயக்கட்டு விவசாயிகள் கலந்து கொண்டு கருத்துக்களைப் பதிவு செய்தனர். இதில், பின்வரும் தீர்மானங்கள் றைவேற்றப்பட்டன. இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 13ம் தேதி முதல், தொடர்ந்து 120 நாட்களுக்கு சாகுபடி பணிகளுக்காக பாம்பாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பாசனக் கால்வாய்களைச் சேதப்படுத்தும் நபர்கள் மீது, காவல் நிலையத்தில் புகார் அளித்து, கடுமையான நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள் சரவணன், வேங்கன், முத்துக்குமார், ராஜசேகர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: