ஓய்வு பெற்ற எஸ்ஐ மீது தாக்குதல் தாய், மகள் உட்பட 4 பேருக்கு வலை வீட்டின் முன் தண்ணீர் ஊற்றிய தகராறில்

ஆரணி, ஜன.29: ஆரணி அருகே வீட்டின் முன் தண்ணீர் ஊற்றிய தகராறில் ஓய்வு பெற்ற எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய தாய், மகள் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(66). இவர் போலீஸ் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி ஓய்வுப்பெற்றுள்ளார். இந்நிலையில் சேகரின் வீட்டின் பக்கத்தில், அவரது உறவினரான ராமன் என்பவரது வீடு உள்ளது. ராமன் மனைவி அலமேலு கடந்த சில தினங்களுக்கு முன்பு சேகர் வீட்டின் எதிரில் தண்ணீர் பிடித்து ஊற்றியுள்ளார். இதனால், சேகர் ‘வீட்டின் முன்பு தண்ணீர் ஊற்றுவதால், சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுகிறது. எனது வீட்டின் முன்பு தண்ணீர் ஊற்றக்கூடாது’ என கூறியுள்ளார். இதனால், இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, அலமேலு திடீரென சேகரை ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இதனை சேகர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அலமேலு, அவரது மகன், மகள் மற்றும் உறவினர் மணிகண்டன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சேகரை சரமாரியாக கட்டை மற்றும் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சேகர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அலமேலு அவரது மகன், மகள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories: