கண்ணமங்கலம், ஜன. 29: கண்ணமங்கலம் அருகே தம்டகோடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாணவிக்கும், களம்பூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் – விமலா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகளும், கோகுலகிருஷ்ணன்(26) என்ற மகனும் உள்ளனர். இதில் மகளுக்குத் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோகுலகிருஷ்ணன் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, தற்போது துபாயில் சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோகுலகிருஷ்ணன் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவியான சோபியா பெல்ஜிங்(21) என்பவரைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இருவரிடையே நட்பாக மலர்ந்து, நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக நேசித்து வந்துள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சோபியா பெல்ஜிங், தற்போது பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியில் தங்கி கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அதேவேளையில், ஆன்லைன் மூலமாக ஜெர்மனியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் காதல் விவகாரத்தை இருவரும் அவரவர் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவீட்டாரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நேற்று காலை நடைபெற்றது. ஜெர்மனியில் இருந்து வந்த உறவினர்கள் இத்திருமணத்திற்காக மணப்பெண் சோபியாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜெர்மனியில் இருந்து வந்திருந்தனர். மணமகன் வீட்டார், நண்பர்கள் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உறவினர்கள் புடைசூழ நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், அனைவரும் மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
