வாயில் தீப்பந்தம்… கையில் கொடியுடன் தலைப்பாகை; சென்னை- பெங்களூரு சாலையில் தவெக தொண்டர் பைக் சாகசம்: 3 பிரிவுகளில் வழக்குபதிவு

பள்ளிகொண்டா: கையில் கொடியுடன் தலைப்பாகை அணிந்துகொண்டு சென்னை, பெங்களூரு விரைவுச் சாலையில் 3 பைக்குகளை நிறுத்தி ரீல்ஸ் எடுத்து வைரலாக்கிய தமிழக வெற்றிக் கழக தொண்டர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பிள்ளையார் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சக்திவேல்(25). இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் பைக் ரேசில் ஈடுபட்டு ரீல்ஸ் செய்து பதிவு செய்து வந்துள்ளார். சில சமயங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இதுசம்பந்தமாக காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக உள்ளார்.

இந்தநிலையில், இவர் தொடர்ந்து தவெக கட்சியின் கொடி மற்றும் துண்டு ஆகியவற்றை பயன்படுத்தி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். நேற்று சென்னை-பெங்களூரு அதிவிரைவுச் சாலையில் காவேரிப்பாக்கம் அருகே 3 பைக்குகளை நிறுத்திவைத்துவிட்டு நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துள்ளார். பின்னர் சாலையின் நடுவே வட்டமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தும் வாயில் பெட்ரோல் ஊற்றி தீப்பந்தம் கையில் வைத்து ஊதி நெருப்பு வளையத்தை ஏற்படுத்தியும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீடியோ எடுத்துள்ளனர். தவெக கட்சி துண்டினை தலையில் கட்டிக்கொண்டும் கட்சி கொடியை கைகளில் பிடித்து கொண்டு பைக் மீது ஏறி நின்று அதிவேகத்தில் 200 மீட்டர் வரை சென்றவாறு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். ரீல்ஸ் வீடியோ எடுத்த அனைத்தையும் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ அனைத்தும் வைரலான நிலையில், மாவட்ட எஸ்பி மயில்வாகனனுக்கு இதுகுறித்து புகார் சென்றன. இதையடுத்து எஸ்பி உத்தரவின்படி, பள்ளிகொண்டா போலீசார் சக்திவேல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: