செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் கம்யூனிஸ்ட் நிர்வாகி பைக் திருடுேபானது. பைக் திருடும் சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பெரிய மேலைமையூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சபரி ஆனந்தன் (39). கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியான இவர், நேற்று மதியம் திம்மராஜகுளம் பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு செங்கல்பட்டு மாவட்ட கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு சங்கப்பணி நிமித்தமாக சென்றுள்ளார். சங்க பணி முடிந்து மாலை வீடு செல்ல பைக்கை எடுக்கவந்தபோது மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப் படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பைக்கை மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, ரயில்நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது வழக்கமாகிவிட்டது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
