இனி, ஆடைகளும் தமிழர் வரலாறு பேசும்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய தலைமுறையினர் பலருக்கு தமிழை எழுதவும், பேசவும், படிக்கக்கூட சிரமப்படுகிறார்கள். இந்த நிலையில் தமிழ் மேல் உள்ள தீராத பற்று காரணமாக அதனை மக்களிடம் பிரதிபலிக்கும் வகையிலும் தமிழின் தாக்கம் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்பட வேண்டும் என்ற வகையில் தமிழ் எழுத்துக்கள் கொண்ட டீஷர்ட்டுகளை அறிமுகம் செய்துள்ளார் பிரியங்கா பழனிசாமி. இவர் ‘J & JP கிளாத்திங் நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் தமிழ் எழுத்துக்கள் கொண்ட டீஷர்ட்டு களை அறிமுகம் செய்துள்ளார்.

‘‘டீ சர்ட்… ஆண், பெண் இருவருக்கும் மிகவும் பிடித்தமான உடை என்று சொல்லலாம். காரணம், இது அணிவதற்கு சுலபம். மேலும், அணிந்தாலும் பார்க்க மார்டனாக இருக்கும். எல்லோரும் விரும்பும் உடையில் தமிழும் தமிழ்மொழி வரலாறும் இடம்பெற்றால் மகிழ்ச்சிதானே! அப்படியாவது தமிழ் பற்றியும் தமிழர் வரலாறு பற்றியும் உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் அறியட்டுமே என்ற எதிர்பார்ப்பில்தான் நான் தமிழ் மொழி தாங்கிய டீஷர்ட்டுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன்.

‘‘எனக்குப் ‘பின்னலாடை நகரம்’ திருப்பூர் தான் சொந்த ஊர். எம்.எஸ்.சி கிளினிக்கல் நியூட்ரீஷியன் அண்ட் பயோ டையட்டிக்ஸில் கோல்டு மெடல் வாங்கினேன். அதன் பிறகு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளரா இருந்தேன். அப்பாவிற்கு கார்மென்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ்ல பெரிய நஷ்டம் ஏற்பட்டதால், எந்தவிதத்திலாவது குடும்பத்திற்கு உதவ நினைச்சேன். என் நண்பர் தயாரித்த ஆடைகளை என் முகநூலில் பதிவு செய்தேன். அதைப் பார்த்து ஆர்டர் வரத் துவங்கியது.

எங்க குடும்பத்துக்கு கார்மென்ட் பிசினஸ் புதுசில்லை. ஆனால், நான் செய்த பிசினஸ் புதுசா இருந்தது. வீட்ேலயும் ஊக்கம் கொடுத்தாங்க. விரிவுரையாளர் வேலையை ராஜினாமா செய்தேன். வங்கியில் கடன் வாங்கி பிசினஸ் ஆரம்பிச்சேன். என்னைப் போன்ற மறு விற்பனையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்’’ என்றவர் தன் தொழில் வளர்ச்சியால் குடும்பத் தொழிலை மீட்டெடுத்தது குறித்து பேசினார்.

‘‘பிசினஸ்மேனா இருந்த அப்பா, 25 வருடங்களுக்குப் பிறகு மிஷினில் உட்கார்ந்து துணிகளை தைத்தார். அம்மாவும் அவருக்கு உதவி செய்தார். 2018ல் J & JP கம்பெனி உருவாச்சு. உடனே கொரோனா… மறுபடியும் சறுக்கல். ஆனால், ‘மாஸ்க்’கான ஆர்டர் அமெரிக்காவில் இருந்து வந்தது. நான், அம்மா, அப்பா மூவரும் நேரம் பார்க்காம உழைத்தோம். கொரோனா முடிஞ்சதும், தொழிலை விரிவுப்படுத்த வங்கியில் மேலும் கடன் வாங்கி துணிகளை உற்பத்தி செய்யவும் ஆரம்பிச்சோம்.

ஆடைகளில் பெரும்பாலும் பலருக்கு சில சென்டிமென்ட்ஸ் இருக்கும். அம்மா புடவை, திருமண ஆடை, முதல் சம்பளத்தில் வாங்கியது, நெருக்கமானவர்கள் கொடுத்த பரிசு என சில ஆடைகள் நம் உணர்வுகளை சுமக்கும். அதேபோல் சில உடைகளை நாம் அணியும் ேபாது நல்லது நடந்தால் அதை மறுபடி மறுபடி அணிவோம். அதுவே மனசுக்கு சங்கடமான நிகழ்வு ஏற்பட்டால் அந்த உடையை அணியவே மாட்டோம். ஆடைகள் போலவே சில நிறங்களும் நமக்கு லக்கியாக இருக்கும். அதன் அடிப்படையில் நான் தயாரிக்கும் உடைகள் அனைத்தும் அனைவருக்கும் ஃபேவரைட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மேலும், காலம் மாற மாற மக்களின் ரசனையும் மாறுபடும். குறிப்பாக ஃபேஷனை பொறுத்தவரை அதில் தினசரி மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதற்கேற்ப நாமும் புதுசாக கொடுத்தால்தான் பிசினசில் நிலைக்க முடியும். அதன் அடிப்படையில்தான் நான் தமிழ் மொழியில் டீஷர்ட்டுகளை அறிமுகம் செய்தேன். குறிப்பாக என்னுடைய ஆடை நிறுவனத்தில் ஒரு பிராண்ட் யூனிக்காக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

முதலில் அறிமுகமாக உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள குடவோலை செய்திகள் மற்றும் ஆத்திச்சூடியை டீஷர்ட்டில் பிரின்ட் செய்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டேன். நானே எதிர்பார்க்காத அளவிற்கு ரெஸ்பான்ஸ் இருந்தது. அதனைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், ஐவகை நிலங்கள், மூவேந்தர்கள், முக்கிய தலைவர்கள் என தொடங்கி சினிமாவில் பிரபல வசனங்கள் அடங்கிய டீஷர்ட்டுகளை ஆண், பெண் இருபாலருக்கும் உருவாக்கினோம். அந்த முயற்சிதான் உலகம் முழுக்க ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. அதுவே எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது’’ என்றவர், தன் வளர்ப்பு நாயின் நினைவால் அதன் பெயரில் ‘சின்ங்க்கூப்பர்’ என்ற பிராண்டில் செல்லப் பிராணிகளின் டீஷர்ட்டுகளும் விற்பனை செய்கிறார்.

‘‘இதிகாசங்களை ெதாடர்ந்து ‘சோழ தேசம்’ டீஷர்ட் மிகவும் பிரபலமானது. தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கையான 247 கிராம் எடையில் டீஷர்ட் அமைத்திருந்தோம். அதில் கலை நயத்துடன் 12×18 இன்ச் அளவில் பிரின்ட் செய்யப்பட்டிருக்கும். அதாவது, உயிரெழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18ஐ மனதில் கொண்டு இந்த அளவினை நிர்ணயித்தேன். உயிர்-மெய் எழுத்துகள் 216ஐ குறிப்பிட 216 தையல்கள் போடப்பட்டுள்ளன. ஆக, தமிழ் மொழி பற்றிய குறிப்பை தாங்கி நின்றது அந்த டீஷர்ட்.

சாதாரணமாக போட்டோ போட்டு ஜீரோ இன்வெஸ்ட்மென்ட்டில் ஆரம்பிச்ச பிசினஸ் இன்று 65 தொழிலாளர்களுடன் வளர்ந்துள்ளது. ரீ செல்லிங் பிசினஸில் லாபம் கம்மியா கிடைச்சாலும் பல தரப்பட்ட மக்களை அதன் மூலம்தான் என்னால சென்றடைய முடிகிறது. நிறைய குடும்பத் தலைவிகளையும் தொழில் முனைவோர்களாக மாற்றியிருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. டிராக் பேன்ட், பேபி ராம்பர், பைஜாமாஸ், ஹூடிஸ், ஃபீடிங் நைட்டி என அன்றாட பயன்பாட்டு ஆடைகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உடைகளை நாங்க தயாரிக்கிறோம்.

2017ல் நாங்கதான் கர்ப்பிணிக்காக பிரத்யேகமான ஆடைகளை அறிமுகப்படுத்தினோம். இன்று பலர் அதனை தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். இன்று எந்தத் தொழிலுக்கும் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமாக உள்ளது. அதனால் நான் படித்த கணினி மையத்தில் இருந்தும் எனக்கான ஆட்களை தேர்வு செய்து கொள்கிறேன். தொழில்நுட்பத்தினை சரியாக பயன்படுத்தினால் சிறு விதை கூட விருட்சமாகும் என்பதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு என்று கூறும் பிரியங்கா, 2023ல் உலகளவில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 64 பெண் தொழில் முனைவோர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: கலைச்செல்வி
படங்கள்: எபினேசர்

Related Stories: