திருவள்ளூர்: திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் மகளிருக்கான மாற்று வாழ்வாதாரப் பயிற்சி நடந்தது. திருவள்ளூர் அடுத்த திரூர் நெல் ஆராய்ச்சி நிலையம், வேளாண் அறிவியல் நிலையம், கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து திருவள்ளுர் மாவட்ட வேளாண் மகளிருக்கான மாற்று வாழ்வாதாரப் பயிற்சி நடந்தது. உதவி பேராசிரியர் சீனிவாச பெருமாள் வரவேற்றார். துணை பேராசிரியர் சுரேஷ் குமார் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வழிமுறைகள் மற்றும் காலநிலை மாறுபாடுகள், திட்டம் குறித்து விரிவாக விவரித்தார்.
நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய தலைவரும், பேராசிரியருமான பானுமதி தலைமை உரையாற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் குறித்து முன்னாள் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் சாந்தி விளக்க உரையாற்றினார். இந்தப் பயிற்சி முகாமில் அறுவடைப்பின் தொழில்நுட்ப பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. எண்ணெய் பிரித்து எடுக்கும் இயந்திரம், உலர் தானியங்கள் மற்றும் மசாலா அரைக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் உதவி பேராசிரியர் குமரேசன் நன்றி கூறினார்.
