தண்டையார்பேட்டை, ஜன.21: காசிமேடு பகுதியில் பிறந்து ஒருமாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.3.80 லட்சத்திற்கு விற்பனை செய்த தாயார் உட்பட 4 பெண்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்ற
னர். காசிமேடு பகுதியைச் சேர்ந்த திலகவதி (25) என்பவருக்கு கடந்த மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப வறுமை காரணமாக திலகவதி தனது குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் திலகவதியிடம் குழந்தை வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது, தண்டையார்பேட்டையை சேர்ந்த பிரதீபா (32), காசிமேடு பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா(45), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கவுசல்யா (40) ஆகியோர் குழந்தையை விற்பனை செய்ய பேரம் பேசியுள்ளனர். இறுதியில், ரூ.3.80 லட்சத்திற்கு குழந்தையை விலை பேசி குழந்தையை விற்பனை செய்தனர்.
இந்நிலையில், குழந்தை விற்பனை செய்யப்படுவதாக தகவல் அறிந்து வந்த காசிமேடு காவல் நிலைய போலீசார் பெண்களிடம் விசாரித்தனர். அதில், திலகவதியின் பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.3.80 லட்சத்திற்கு விற்றது தெரியவந்தது. மேலும், திலகவதிக்கு ரூ.3 லட்சம் கொடுத்துவிட்டு பிரதீபாவுக்கு ரூ.20 ஆயிரம், வெண்ணிலாவுக்கு ரூ.30 ஆயிரம், கவுசல்யாவுக்கு ரூ.30 ஆயிரம் பங்கு பிரித்துக் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பெண்களையும் கைது செய்து காசிமேட்டில் உள்ள சைல்ட் வெல்பவர் கம்யூனிட்டி அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
