வறட்சி, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வேண்டும்

*கிராமசபை கூட்டங்களில் விவசாயிகள் கோரிக்கை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி மற்றும் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் நிவாரணம், இழப்பீடு வழங்க வேண்டும் என பெரும்பாலான கிராப சபை கூட்டங்களில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.குடியரசு தினவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் 11 யூனியன்களில் உள்ள 429 பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. கடலாடி ஒன்றியம், இதம்பாடல் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். அப்போது அவர் கிராமமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘ஒவ்வொரு ஊராட்சியிலும் அடிப்படை தேவைகள் அதிகரித்துக் கொண்டு இருக்கும். அந்தந்த நிதியாண்டில் நிதிக்கேற்ப திட்டப்பணிகள் செயல்படுத்தி முடித்திடப்படும். இப்பகுதியில்சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் பேருந்து நிலைய பகுதியில் தெருவிளக்குகள் உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பள்ளி அருகாமையில் பழுதடைந்த கட்டிடத்தின் பயன்பாடற்ற பொருள்கள் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தில் விடுப்பட்டவர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் உரிய ஆவணங்களுடன் மேல் முறையீடு செய்யலாம். அதேபோல் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு பெற விரும்புவோர் பிடிஓக்களிடம் மனு அளிக்கலாம். குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளன’’ என தெரிவித்தார்.

தொடர்ந்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மகளிர் திட்ட துறையின் மூலம் 20 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மநாபன், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரபாண்டியன், ஜெய்ஆனந்த் கலந்து கொண்டனர்.

இதேபோன்று அனைத்து பஞ்சாயத்துகளிலும் நடந்த கிராம சபைக் கூட்டங்களுக்கு அந்தந்த யூனியன் சிறப்பு அதிகாரிகள், பி.டி.ஓக்கள், மண்டல துணை பிடிஓக்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. இதில் கடலாடி, முதுகுளத்துார், கடலாடி போன்ற ஒன்றியங்களில் போதிய மழையின்றி நெல், மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டதாலும், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை போன்ற பகுதிகளில் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதாலும் அரசு நிவாரணம் மற்றும் தேசிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: