சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு தலைவர் சேம.நாராயணன் தலைமையில் மதுராந்தகத்தில் நடந்தது. மாநில செயல் தலைவர் எஸ்.என்.பழனி முன்னிலை வகித்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து சங்கத்தின் மாநில தலைவர் சேம.நாராயணன் கூறியதாவது:
அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும். அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மின்சக்கரம் வழங்கி அதற்குரிய மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அடிமனை பட்டா வழங்க வேண்டும் என்றார்.
மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க மாநில மாநாடுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி இருந்த வாழ்த்து செய்தி:
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த சங்கத்தின் மாநில தலைவர் சேம.நாராயணன், இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மண்ணை பிசைந்து வண்ண கலைவடிவங்களாக வார்த்தெடுக்கும் திறன் கொண்ட கைவினைஞர்கள்தான் மண்பாண்ட தொழிலாளர்கள், சுற்றுச்சூழலுக்கும் உடல்நலனுக்கும் உகந்த மண்ணாலான பாண்டங்களை கலைநேர்த்தியுடன் உருவாக்கும் மண்பாண்ட தொழிலாளர்களின் கலைத்திறனும், உழைப்பும் போற்றுதலுக்கு உரியது. பண்டைத் தமிழர்களின் வாழ்வையும், நாகரிகத்தையும் இன்றைய உலகுக்கு எடுத்துக் கூறும் வரலாற்று சான்றுகளாக நிலைத்திருப்பவை மண்ணால் ஆன பாண்டங்களும், கருவிகளும்தான் என்பதை கீழடி நமக்கு உணர்த்துகிறது.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாலும் அழியாமல் நிலைத்திருக்கும் தொழில்நுட்பத்துடன் மண்பாண்டங்களை உருவாக்கும் திறன் பண்டை தமிழர்களுக்கு இருந்ததை கீழடியின் நாகரிக சுவடுகள் நமக்கு உணர்த்துகின்றன. மண்ணிலே கலைவண்ணம் காணும் மகத்தான மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
