கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருது: நடிகர் மம்மூட்டி, விஜய் அமிர்தராஜ், சிபு சோரனுக்கு பத்ம பூஷன்

* நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, விஜயகுமார் ஐபிஎஸ்.க்கு பத்ம ஸ்ரீ

புதுடெல்லி: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 131 பேருக்கு பத்ம விருதுகளை ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதாநந்தனுக்கு பத்ம விபூஷன் விருதும், நடிகர் மம்மூட்டி, மறைந்த மூத்த அரசியல் தலைவர் சிபுசோரனுக்கு பத்ம பூஷன் விருதும், நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட உள்ளது.

கல்வி, இலக்கியம். அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகளை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை பெறும் 131 பேர் பட்டியலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

இதில், கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதாநந்தனுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினரான அச்சுதாநந்தன் கடந்த 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக பதவி வகித்துள்ளார். தொழிலாளர்கள் உரிமை, நில சீர்த்திருத்தம், சமூக நீதிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அச்சுதாநந்தன், 101வது வயதில் கடந்த ஆண்டு காலமானார்.

இதே போல, பாலிவுட் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மறைந்த நடிகர் தர்மேந்திராவுக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், பிரபல மலையாள பத்திரிகையாளர் பி.நாராயணன், உபியை சேர்ந்த இந்துஸ்தானி வயலின் இசைக் கலைஞர் என்.ராஜம் ஆகியோர் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாரான மம்மூட்டி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மறைந்த சிபு சோரன், டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜ் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் அமிர்தராஜ் ஏற்கனவே 1983ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் ஆவார். இவர்களைத் தவிர, நடிகர் மாதவன், 2024ல் டி20 உலகக் கோப்பை மற்றும் 2025ல் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய இரு ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா,

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மகளிர் உலக கோப்பை ஒருநாள் தொடரில் முதல் முறையாக இந்திய அணிக்கு உலக கோப்பை வென்று தந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், டிடிகே பிரஷ்டீஜ் குழுமத்தின் முன்னாள் தலைவரான மறைந்த டி.டி.ஜெகநாதன், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜகதீஷ் குமார், பிரசார் பாரதி முன்னாள் சிஇஓ சசி சேகர் வேம்பதி ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவ துறையில் டாக்டர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமிக்கும், சமூக சேவைக்காக ஈரோடு தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானநந்தனுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது. கலைத்துறையில் சாதித்த கர்நாடக இசை பாடகிகள் காயத்ரிபாலசுப்ரமணியம் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியத்திற்கும், மருத்துவ பிரிவில் முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவுக்கும், அறிவியல், பொறியியல் பிரிவில் கே.ராமசாமிக்கும்,

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமாருக்கும், கலைப்பிரிவில் ஓதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கும், மருத்துவத்துறை பிரிவில் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் கோத்தகிரி ஆலு குறும்பர் பழங்குடியினத்தை சேர்ந்த ஓவியர் கிருஷ்ணனுக்கும், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ஐம்பொன் சிலை சிற்ப கலைஞரான ராஜாஸ்தபதி காளியப்பகவுண்டருக்கும்,

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கும், இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவில் எழுத்தாளர் சிவசங்கரிக்கும், கலைப் பிரிவில் திருவாரூர் பக்தவச்சலத்திற்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 பேருக்கு பத்ம விபூஷன், 13 பேருக்கு பத்ம பூஷன், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 19 பேர் பெண்கள். இவர்களுக்கான விருதுகள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முர்மு வழங்கி கவுரவிப்பார்.

* புதுச்சேரி சிலம்பாட்ட கலைஞருக்கு பத்ம ஸ்ரீ
புதுச்சேரியை சேர்ந்த சிலம்பாட்ட கலைஞர் கே.பழனிவேலுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிலம்பாட்ட பயிற்றுநராக கடந்த 40 ஆண்டுகளாக இவர், இந்த பாரம்பரிய தற்காப்பு கலையை பலருக்கும் இலவசமாக பயிற்றுவித்து வருகிறார். இவர் புதுச்சேரியின் பூரணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்.

* பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘நமது தேசத்திற்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கிய அனைத்து பத்ம விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் அவர்களின் சிறப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வளப்படுத்துகின்றன. இந்தக் கவுரவம், தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பின் உணர்வைப் பிரதிபலிக்கிறது’’ என கூறி உள்ளார்.

Related Stories: