புதுடெல்லி: உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் சாதியப் பாகுபாடுகளைத் தடுக்க பல்கலைக்கழக மானியக் குழு புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதி ரீதியான பாகுபாடுகள் தொடர்பான புகார்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. புள்ளிவிபரங்களின்படி, 2019 – 2020ம் ஆண்டில் 173 ஆக இருந்த புகார்கள், 2023-2024ம் ஆண்டில் 118.4 சதவீதம் அதிகரித்து 378 ஆக உயர்ந்துள்ளது. கல்வி நிலையங்களில் மாணவர்களின் நலன் குறித்து நீதிமன்றங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், 2012ம் ஆண்டு இருந்த பழைய விதிமுறைகளை மாற்றி, ‘உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான விதிமுறைகள் – 2026’ என்ற புதிய வரைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கடந்த வாரம் அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின்படி பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மட்டுமின்றி மதம், பாலினம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிறப்பிடம் சார்ந்த பாகுபாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் சம வாய்ப்பு மையம் மற்றும் நிறுவனத் தலைவர் தலைமையில் சமத்துவக் குழுவை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதிகள் மற்றும் வளாகங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட ‘சமத்துவப் படைகள்’ மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்கள் உருவாக்கப்பட வேண்டும். புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குழு கூடி விசாரணை நடத்த வேண்டும். தவறு நடக்கும் பட்சத்தில் கல்வி நிறுவனத் தலைவர்களே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று புதிய விதிகளில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளைச் செயல்படுத்தத் தவறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரித்துள்ளது. விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசின் நிதியுதவி நிறுத்தப்படுவதுடன், பட்டப் படிப்புகளை வழங்க தடை விதிக்கப்படும் எனவும், மிக மோசமான சம்பவங்கள் நடந்தால் அந்த நிறுவனத்தின் அங்கீகாரமே ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துணைவேந்தர்கள் கூறுகையில், ‘இதுவரை வெறும் அறிவுரைகளாக இருந்தவை தற்போது சட்டரீதியான கடமைகளாக மாற்றப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தனர். தேசிய அளவிலான கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு இரண்டு முறை இந்தச் செயல்பாடுகள் மற்றும் புகார்கள் குறித்து ஆய்வு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
