அனைவரும் பொறுப்பேற்போம்; இந்திய தயாரிப்பு பொருட்கள் உயர் தரத்தில் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது மாதாந்திர 130வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது:
உலகம் இந்தியாவை கவனித்து வருகிறது. எனவே, தரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பெரும் பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டும். எந்த ஒரு இந்திய தயாரிப்பு பொருட்களும் உயர் தரமானதாக இருக்க வேண்டும். அது நமது ஜவுளிகளாக இருந்தாலும் சரி, தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, மின்னணு பொருட்களாக இருந்தாலும் சரி, பேக்கேஜில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களாக இருந்தாலும் சரி, அத்தனையும் உயர் தரமானதாக இருக்க வேண்டும்.

அது எப்படியோ நடக்கும், அது வேலை செய்யும், எப்படியோ சமாளித்து விடலாம் என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது. இந்த ஆண்டு நமது முழு பலத்துடன் தரத்திற்கு முன்னுரிமை அளிப்போம். தரம் மட்டுமே நமது ஒரே மந்திரமாக இருக்கட்டும். நேற்றையதை விட இன்று சிறந்த தரம். நாம் உற்பத்தி செய்யும் எதன் தரத்தையும் மேம்படுத்த தீர்மானிப்போம். இதை செய்வதன் மூலம் மட்டுமே வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை நாம் விரைவுபடுத்த முடியும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு 2016ல் இந்தியாவின் ஸ்டார்ட் அப் பயணம் தொடங்கியது. இன்று இந்தியா உலகின் 3வது பெரிய ஸ்டார்ட் அப் மையமாக மாறி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத துறைகளில் இன்று நமது ஸ்டார்ட் அப்கள் கால் பதித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, அணுசக்தி, குறைக்கடத்திகள், இயக்கம், பசுமை ஹைட்ரஜன் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த முயற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்களுக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மேலும், தேசிய வாக்காளர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மலேசியாவில் 500 தமிழ் பள்ளிகள்
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நமது கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள், உலகம் முழுவதிலும் தங்களுடைய அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றன. மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் தமிழ் கற்பிக்கப்படுவதோடு, பிற விஷயங்களையும் கூட தமிழிலேயே கற்பிக்கின்றார்கள். கடந்த 2023ம் ஆண்டினை சிறுதானிய ஆண்டாக நாம் அறிவித்திருந்தோம். இன்று 3 ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட, இது தொடர்பாக பேரார்வமும், அர்ப்பணிப்பும் மிகவும் உற்சாகத்தை அளிக்கின்றது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரியகல்வராயன் சிறுதானிய எப்பிசியுடன் கிட்டத்தட்ட 800 பெண் விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை நேரடியாக சந்தைவரை கொண்டு சேர்த்து வருகிறார்கள்’’ என்றார்.

Related Stories: