ஆரணி, ஜன.26: ஆரணி அருகே மாந்திரீகம் செய்வதாக கூறி தொழிலாளியை சரமாரி வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த கம்பத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானமூர்த்தி(48), கட்டிட தொழிலாளி. இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் உள்ள அவரது உறவினரின் வீட்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஞானமூர்த்தி அவரது ஊரை சேர்ந்த சிவக்குமார்(46) என்பவரை அழைத்து வந்து கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் ஞானமூர்த்தி, சிவக்குமார் வேலை செய்துவிட்டு, வீட்டின் அருகில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த சீனு(56) என்பவர், திடீரென அங்கு வந்து ஞானமூர்த்தி, சிவக்குமாரிடம் என் வீட்டிற்கு மாந்திரீகம் செய்கிறீர்களாக என கேட்டு தகராறு செய்துள்ளார். தொடர்ந்து காலால் உதைத்து சண்டை போட்டு ஆபாசமாக திட்டினர்.
இருவரும் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சீனு வீட்டில் இருந்து கத்தியை எடுத்துவந்து சிவக்குமாரை சரமாரியாக வெட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடினர். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, சிவக்குமார் ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீனுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
