கோவை, ஜன. 26: கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் மண்டல அளவில் 41 தீயணைப்பு துறையினருக்கு கமாண்டோ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆற்றை நீந்தி கடப்பது, உயரமான கட்டடங்களில் ஏறி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, இடிபாடுகளில் சென்று வருவது போன்ற பல்வேறு பயிற்சி தரப்படுகிறது. நேற்று தீயணைப்பு அலுவலக 3 மாடி கட்டடத்தில் கயிறு கட்டி ஏற பயிற்சி தரப்பட்டது.
இதில் தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலமாக வேகமாக ஏற பயிற்சி பெற்றனர். ஒரு மாத காலத்திற்கு இவர்கள் பல்வேறு பகுதியில் பயிற்சி பெறவுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தோளில் சுமந்து கயிற்றின் மூலமாக இறங்கவும், புகை நெடி உள்ள பகுதியில் மயங்கி கிடப்பவர்களை உயர்ந்த கட்டடங்களில் இருந்து மீட்டு வரவும் பயிற்சி வழங்கப்பட்டது.
