கலாச்சார ரீதியாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒன்றிய அரசு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குற்றச்சாட்டு

சென்னை: கலாச்சார ரீதியாக தமிழர் கள் மீது ஒன்றிய அரசு தாக்குதல் நடத்துகிறது என அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தியாகிகளை நினைவு கூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி.

தொடர்ந்து இடையிடையே ஒன்றிய அரசு தமிழ் மீது நடத்தக்கூடிய வகையில் நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மீது தாக்குதல் நடத்தக்கூடிய வகையில், திணிப்பு என்பதைதான் திமுக என்றைக்கும் நம்முடைய பேரறிஞர் அண்ணா காலத்திலும் சரி, முத்தமிழறிஞர் காலத்திலும் சரி, இன்றைய நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலினும், அதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திணிப்பை தான் நாங்கள் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம்.

வழக்கமாக, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதிகள் கல்வித் துறையாக இருந்தாலும் சரி, அதேபோல் மகாத்மா காந்தியின் பெயரிலான வேலை வாய்ப்பு உறுதித் திட்டமாக இருந்தாலும் சரி-ஏழை எளிய மக்கள், அதிலும் குறிப்பாக ஏறத்தாழ 80 சதவிகிதம் தாய்மார்கள் பணியாற்றக்கூடிய அந்த கிராமப்புறத்தில் பொருளாதாரத்தை நிலைநிறுத்தக்கூடிய ஒரு திட்டம், அற்புதமான திட்டம்-கலைஞரின் வேண்டுகோளை ஏற்று அன்றைக்கு இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான அரசு சோனியாகாந்தியின் வழிகாட்டலோடு அத்திட்டத்தை கொண்டுவந்தது. அதில் பெயரை மாற்றி இன்றைக்கு குழப்பதை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்காகதான் சிறப்புத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நம்முடைய முதல்வர் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எப்போது பார்த்தாலும் தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் தமிழர்களின் பண்பாடு மீதும் அவர்கள் ஆங்காங்கே கலாசார ரீதியாக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதை வன்மையாக தொடர்ந்து கண்டித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: