* வங்கதேச வாரியம் மீண்டும் கடிதம்
புதுடெல்லி: வங்கதேச கிரிக்கெட் வாரியம், தாங்கள் பங்கேற்கும் உலகக் கோப்பை டி20 போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அந்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்துள்ளது. இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஐசிசிக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘உலகக் கோப்பை டி20யில், வங்கதேசம் பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, ஐசிசியின் தனிப்பட்ட சர்ச்சைகள் தீர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
* 12 ஓவரில் வெற்றி இளம் ஆஸி கலக்கல்
விண்ட்ஹோக்: நமீபியா தலைநகர் விண்ட்ஹோக்கில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் இளம் இலங்கை – இளம் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை வீரர்கள், ஆஸியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 18.5 ஒவரில் 58 ரன்னுக்கு சுருண்டனர். அந்த அணியின் 9 வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர், எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 12 ஓவரில், ஒரு விக்கெட் மட்டும் இழந்து 61 ரன் குவித்து வெற்றி வாகை சூடியது.
* குவாலிபையர் 2க்கு பார்ல் ராயல்ஸ் தகுதி
செஞ்சுரியன்: எஸ்ஏ20 டி20 போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வென்று குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறியது. எஸ்ஏ20 டி20 போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நடந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜோபர்க்ஸ் அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 174 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால், 36 ரன் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றியை பதிவு செய்த பார்ல் ராயல்ஸ் அணி, குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
