காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,404 பயனாளிகளுக்கு ரூ.37.23 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா, நலத்திட்டம்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

காஞ்சிபுரம், மார்ச் 4: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,404 பயனாளிகளுக்கு ரூ.37.23 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலமற்ற மக்கள் மற்றும் பட்டா இன்றி குடியிருப்பவர்களும், பயன்பெறும் வகையில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு, மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 07.05.2021 முதல் இதுவரை 33,919 பயனாளிகளுக்கு ரூ.579.71 கோடி மதிப்பீட்டில் நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கும், பட்டா இல்லாமல் குடியிருப்போருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று வருவாய் துறை சார்பில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், 655 பயனாளிகளுக்கு ரூ.18.53 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 8 மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு ரூ.13.11 லட்சம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 80 பயனாளிகளுக்கு ரூ. 3,82,800 மதிப்பிலான தையல் இயந்திரங்களும், உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.30,000 மதிப்பிலான மாவு அரைக்கும் இயந்திரங்களும் என மொத்தம் 749 பயனாளிகளுக்கு ரூ.18.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவான தேவைகளை வழங்கிட விபிஆர்சி கட்டிடம், கோனேரிக்குப்பம் (காஞ்சிபுரம் (தெற்கு)), ஆரம்ப சுகாதார நிலையம், தேவரியம்பாக்கம் (வாலாஜாபாத்), மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், மானாம்பதி (உத்திரமேரூர்) ஆகிய இடங்களில் ரூ.46.86 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

முன்னதாக உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சி வேகவதி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாலம் மற்றும் தார் சாலையினை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தி.சினேகா, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: