பக்கிங்காம் கால்வாய் அருகே குப்பை கொட்டிய வாகனத்துக்கு அபராதம்

 

மாமல்லபுரம், மார்ச் 9: மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் அருகே குப்பைகளை கொட்டிய வாகனத்தை சிறைபிடித்து நகராட்சி ஆணையர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.  மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பக்கிங்காம் கால்வாய், திருக்கழுக்குன்றம் சாலையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பக்கிங்காம் கால்வாய்க்கு அருகே சென்று பார்த்தபோது ஒரு தனியார் வாகனத்தில் இருந்து குப்பைகளை கொட்டுவது தெரிந்தது. பின்னர், அந்த வாகனத்தை மடக்கி பிடித்து, ஊழியர்கள் உதவியோடு நகராட்சி அலுவலகம் கொண்டு வந்தார்.

பின்னர், இதுகுறித்து ஆணையர் வித்யாக்கு, துப்புரவு ஆய்வாளர் குருசாமி தகவல் தெரிவித்தார். இதையடுத்து, குப்பைகளை கொட்டிய வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, மீண்டும் இதுபோன்று குப்பைகளை கொட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து குப்பை கொட்டிய வாகனத்தை ஆணையர் விடுவித்தார்.

Related Stories: