வெலிங்டன்: ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடியபோது இடது காலில் ஏற்பட்ட பலத்த தசைநார் கிழிவு காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில் அவரது காயம் தீவிரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்குப் பதிலாக மாற்று வீரராக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய சுற்றுப்பயணத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் ஜேமிசன் ஏற்கனவே இணைந்துள்ளதால், இது அணிக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக கைல் ஜேமிசன் இந்த உலகக்கோப்பைத் தொடருக்கான ‘ரிசர்வ்’ வீரராக மட்டுமே பெயரிடப்பட்டிருந்தார்.
ஆடம் மில்னேவின் விலகல் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பயிற்சியாளர் ரோப் வால்டர், அவர் இந்தத் தொடருக்காக மிகவும் கடினமாக உழைத்ததாகவும், அவரது விலகல் துரதிர்ஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், ஜேமிசனின் திறமை மற்றும் அனுபவம் உலகக்கோப்பையில் அணிக்கு வலு சேர்க்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜேமிசன் முதன்மை அணிக்குச் சென்றதால், காலியாக உள்ள ரிசர்வ் வீரர் இடத்திற்குப் புதிய வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார். நியூசிலாந்து அணி தனது முதல் உலகக்கோப்பை லீக் போட்டியில் பிப்ரவரி 8-ம் தேதி சென்னையில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
