ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஜோரான ஜோகோவிச்: சிதறடித்த சின்னர்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் நேற்று, இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் அபார வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஒபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியா வீரர் ஜேம்ஸ் டக்வொர்த் உடன் மோதினார். துவக்கம் முதல் சூறாவளியாய் சுழன்றாடிய சின்னர், எவ்வித சிரமமுமின்றி புள்ளிகளை குவித்து முதல் செட்டை, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.

அடுத்து நடந்த 2 செட்களிலும் ஆக்ரோஷமாக ஆடிய அவர், 6-4, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்களை வசப்படுத்தினார். அதனால், 3-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38), இத்தாலியை சேர்ந்த இளம் வீரர் பிரான்செஸ்கோ மாஸ்ட்ரெலி (23) உடன் மோதினார். தகுதிச் சுற்று மூலம் போட்டியில் நுழைந்த மாஸ்ட்ரெலி, ஜோகோவிச் உடன் ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். அதனால், 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி வாகை சூடிய ஜோகோவிச் 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Related Stories: