ஜகார்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை சிந்து, டென்மார்க் வீராங்கனை லைன் ஹோஜ்மார்க் ஜேர்ஸ்பெட் உடன் மோதினார். முதல் செட் போட்டியில் இருவரும் சளைக்காமல் ஆக்ரோஷமாக மோதினர். இழுபறியாக நடந்த அந்த செட்டின் கடைசியில் 21-19 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிந்துவின் ஆதிக்கமே காணப்பட்டது. அந்த செட்டை 21-18 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சென் யுபெயை, சிந்து எதிர்கொள்ள உள்ளார்.
* வென்றார் சென்: காலிறுதிக்கு தகுதி
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் நேற்று இந்திய வீரர் லக்சயா சென், ஹாங்காங் வீரர் ஜேசன் குனவான் உடன் மோதினார். துவக்கம் முதல் அட்டகாசமாக ஆடிய சென், முதல் செட்டை 21-10 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சென்னின் ஆதிக்கமே காணப்பட்டது. அந்த செட்டையும் 21-11 என்ற புள்ளிக்கணக்கில் அவர் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் காந்த் கிடாம்பி, தைவான் வீரர் சோ டியன் சென் உடன் மோதினார். பம்பரமாய் சுழன்றாடிய சோ டியன், 21-11, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில் லக்சயா சென், தாய்லாந்து வீரர் பக்காபோன் தீராராட்சகுல் உடன் களம் காண உள்ளார்.
