சென்னை: இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (22.01.2026) வினா – விடை நேரத்தின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார். சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன்: கும்பகோணம் நகரில் உள்ள திருக்கோயில்கள் திருத்தேர்களுக்கு கொட்டகை அமைக்க அரசு ஆவன செய்யுமா? அமைச்சர் : தெற்கூரை வேய்ந்து தேர் காக்கும் வேந்தர், புதிய தேர் செய்து திருக்கோயில் புகழ் சேர்க்கும் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்கனவே 12 திருத்தேர்கள் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1.92 கோடி ரூபாய் செலவில் 3 புதிய திருத்தேர்கள் செய்து தரப்பட்டு, ஒரு திருத்தேரின் மராமத்து பணியும் முடிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு சேர்த்து 15 திருத்தேர்களுக்கும் திருத்தேர் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் கோரி இருக்கின்ற இரண்டு திருத்தேர்களில் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு 43.60 லட்சம் ரூபாய் செலவில் ஒரு திருத்தேரும், மற்றொரு திருக்கோயிலுக்கு 24.50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு திருத்தேரும் உருவாக்கப்பட்டு ஜனவரி மாதம் ஒரு திருத்தேரும், பிப்ரவரி மாதம் ஒரு திருத்தேரும் வெள்ளோட்டத்திற்கு தயாராக இருக்கின்றது. அந்த வகையில் அவரது தொகுதிக்கு மட்டும் 17 மரத்திருத்தேர்கள் இதுவரையில் செய்து தரப்பட்டு இருக்கின்றது. திராவிட மாடல் ஆட்சியில் திருத்தேர்கள் வெயிலிலும், மழையிலும் நனையக் கூடாது என்பதற்காக வரலாற்றில் முல்லைக்கு தேர் தந்த பாரியை போல தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் இதுவரை 134 புதிய திருத்தேர்கள் செய்திட 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதில் 29 திருத்தேர் பணிகள் நிறைவுற்று இருக்கின்றன. அதேபோல திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை திருத்தேர்களை பாதுகாத்திடும் வகையில் 197 திருத்தேர் கொட்டகை பணிகள் எடுத்தக் கொள்ளப்பட்டு அதில் 119 திருத்தேர் கொட்டகைகள் அமைக்கப்பட்ட வரலாறு இந்த திராவிட மாடல் அரசுக்கு சொந்தம் என்பதை பேரவை தலைவர் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் : பேரவை தலைவர் அவர்களே, அன்பால் உயிர்கள் ஒன்றாகும் அறத்தால் உலகம் நன்றாகும் என்ற முழக்கத்தை முன்வைத்து சீரோடும் சிறப்போடும் பகலில் சூரியனாகவும், இரவில் சந்திரனாகவும் இரவு பகல் பார்க்காமல் உழைத்திடும் நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சரை நான் வணங்குகிறேன். எறும்பை விட சுறுசுறுப்பாக ஓடி ஓடி பணியாற்றும் நம்முடைய துணை முதலமைச்சர் அவர்களை வணங்குகிறேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசால் சுமார் 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ள நிலையில் கோயில் நகரம் கும்பகோணத்தில் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவும் நடைபெற்றமைக்கும், கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு யோகபுரீஸ்வரர் திருக்கோயில் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், அருள்மிகு சுந்தரேஸ்வர சுவாமி வெட்டு காளியம்மன் திருக்கோயில், அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், அருள்மிகு நாகேஸ்வரன் திருக்கோயில், அருள்மிகு இராமசாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கெல்லாம் இன்றைக்கு புதிய தேர்கள் வழங்கி அதோடு இல்லாமல் கும்பகோணம் பகுதிக்கு மட்டும் அறநிலையத்துறை மூலமாக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகளை எங்களுக்கு வழங்கி இருக்கின்ற முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் என் சார்பிலும், தொகுதி மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, தமிழகத்தில் திருக்கோயில்களின் நகரம் என்று அழைக்கப்பட்டால் அது கும்பகோணமாகத் தான் இருக்க முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் தான், நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷமான 1,000, 2,000, 3,000 ஆண்டுகளுக்கு மேலான திருக்கோயில்களுக்கு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு 425 கோடி ரூபாயை அரசு மானியமாக ஒதுக்கி, மன்னர்களின் பொக்கிஷத்தை காப்பாற்றிய மாமன்னன் எங்கள் முதல்வர் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்களில் 77 திருக்கோயில்கள் குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது. அதில் உறுப்பினர் குறிப்பிட்ட அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக இந்த அவைக்கும், உறுப்பினர் அவர்களுக்கும் தெரிவித்து பதிவு செய்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன்: பேரவை தலைவர் அவர்களே, இந்த அரசால் புதிதாக செய்து கொடுக்கப்பட்ட அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் திருத்தேரின் வெள்ளோட்டம் வரும் 30ம் தேதி நடைபெற இருக்கின்றது. அந்த திருத்தேருக்கும் கொட்டகை அமைத்து தருவார்களா என்பதையும், அதே நேரத்தில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தெற்குபுறம் உள்ள மொட்டை கோபுரம் ஐந்து நிலை கோபுரமாக அமைத்து தருவதாக நம்முடைய அமைச்சர் ஏற்கனவே சொல்லி இருக்கின்றார்.
அதற்கு எப்போது அடிக்கல் நாட்டப்படும் என்பதையும், நம்முடைய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் பெருமுயற்சியினால் கும்பகோணத்தில் யாத்திரை நிவாஸ் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. அது எப்பொழுது நிறைவடையும் என்பதையும், அறநிலையத்துறை மூலமாக ஒரு திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றது. அது எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்பதையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்ற சிதிலமடைந்த கோயில்களுக்கு எல்லாம் ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு பல கோயில்கள் இன்றைக்கு குடமுழுக்கு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் திருவிடைமருதூர் தொகுதி மானம்பாடியில் உள்ள சோழ மன்னன் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கலைக்கு பெயர் பெற்ற அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால் இதற்கான சீரமைப்பு பணிகள் எப்பொழுது தொடங்கி முடிவடையும் என்று இந்த பேரவையில் 18.3.2025 அன்று வினா எழுப்பியதற்கு அமைச்சர் திருக்கோயில் திருப்பணி தொடர்பாக அனைத்து மதிப்பீடுகளும் தயாரிக்கப்பட்டு விரைவில் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார். முதல் கட்ட பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளதால் ஏனைய பணிகள் எப்பொழுது நடைபெறும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக அமைச்சர் அவர்களை கேட்டு அமைகிறேன்.
2028 ஆம் ஆண்டு உலகத்தில் இருக்கின்ற அனைத்து ஆன்மிக பக்தர்களும் வருகின்ற மகாமகம் திருவிழாவை முன்னிட்டு நம்முடைய கலைஞர் அரசில் அதற்கு தேவையான, முன்னுதாரணமாக என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதை நான் பல்வேறு நிலையில் எடுத்து வைத்திருக்கின்றேன். அதனை நம்முடைய அமைச்சர் , முதலமைச்சர் அவர்களை கலந்து கொண்டு விரைவாக அப்பணிகளை இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும் என்பதனையும் கோரிக்கையாக நான் வைக்கிறேன். அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, யாத்திரிநிவாஸ் என்று பழைய காலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் மாற்றப்பட்டு பக்தர்கள் தங்கும் விடுதி என்று தற்போது பெயர் மாற்றப்பட்டிருக்கின்றது. உறுப்பினர் தெரிவித்த அந்த பக்தர்கள் தங்கும் விடுதியின் 40 சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளன. பிப்ரவரி மாத இறுதிக்குள் அந்த பணிகள் நிறைவு செய்யப்படும். திருமண மண்டபத்தை குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றார். அந்த திருமண மண்டப பணியானது 90 சதவீதம் முடிவடைந்து இருக்கின்றது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. சட்டப் போராட்டத்தை நடத்தி நிச்சயம் மீதமுள்ள பணிகளும் முடிப்பதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மகாமகத்தை பொறுத்தளவில் சைவ, வைணவ திருக்கோயில்கள் என்று 17 திருக்கோயில்கள் இருக்கின்றன. சைவ திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலுக்கு சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. 2028 ஆம் ஆண்டு நடைபெறும் மகாமகமானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா என்பதால் சைவத் திருக்கோயில்கள் 12-ல் ஒன்றை தவிர்த்து மீதமுள்ள 11 திருக்கோயில்களுக்கும் 30 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. 5 வைணவத் திருக்கோயில்களுக்கு 16 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இதில் நாங்கள் குறிப்பிட்டு பெருமையோடு நிமிர்ந்து சொல்ல வருவது என்னவென்றால் இந்த மகாமகம் விழாவானது 2028ல் நடக்கும். இந்த விழா நடக்கின்றபோது 17 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றிருக்கும். அப்போது முதலமைச்சர் இந்த அவையிலே முதலமைச்சராக இருப்பார் என்பதையும் பதிவு செய்து, உறுப்பினர் கோரிய அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் : பேரவை தலைவர் அவர்களே, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த அன்னவாசல் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவன் கோயில், இதுபோல இலுப்பூர் பேரூராட்சியில் இருக்கக்கூடிய சிவன் கோயில் ஆகியவற்றை திருப்பணி செய்ய உபயதாரர்கள் எல்லாம் முடிவு செய்து அதற்கு குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகள் நடத்தி வருகின்றோம். பேரவை தலைவர் வாயிலாக துறை அமைச்சர் அவர்களிடம் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கி தேவையான நடவடிக்கை எடுத்திட அரசு முன் வருமா என்பதனை அறிய விரும்புகிறேன். அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, முதலமைச்சர் எங்களுக்கு இட்டிருக்கின்ற கட்டளையெல்லாம் இன்னார் இனியவர் என்று அல்லாமல், யார் கேட்டாலும் குடமுழுக்கு, திருத்தேர் திருப்பணி மற்றும் மராமத்து பணிகள் என்று எவையாக இருந்தாலும் உடனடியாக அதனை செய்து தர வேண்டும் என்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் அன்பிற்கினிய சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களின் கோரிக்கை இன்றே மண்டல இணை ஆணையர் மூலம் ஆய்வு செய்து எத்தனை நாட்களுக்குள் பணி முடிக்கப்படும் என்பதை நாளை அவையில் தெரிவிக்கிறேன் என்பதனை பேரவை தலைவர் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் : பேரவை தலைவர் அவர்களே, மக்கள் முதல்வர் தாய் தாய் உள்ளம் கொண்ட முதலமைச்சர் அவர்களையும் துணை முதலமைச்சர் அவர்களையும் வணங்குகிறேன். எனது ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் நகரில் உள்ள அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயிலுக்கு புதிதாக திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே அருள்மிகு நாகநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட திருத்தேருக்கு பாதுகாப்பாக இருக்க திருத்தேர் தொட்டகை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் அந்த பாதுகாப்பு கொட்டகை அமைக்க துறையின் மூலம் அந்த கோயில் நிதி ரூபாய் 35 லட்சம் மூலம் அமைத்துக் கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருக்கோயிலில் நிதி அந்த அளவிற்கு இல்லை. எனவே அந்த திருத்தேர் பாதுகாப்பாக இருக்க இந்து சமய அறநிலையத்துறை நிதியின் மூலம் திருத்தேர் கொட்டகை பாதுகாப்பு கொட்டகை அமைத்து தர அமைச்சர் முன்வருவாரா என கேட்டு அமர்கிறேன். அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலுக்கு ரூபாய் 34 லட்சத்தை ஆணையர் பொது நலநிதியிலிருந்து இன்னும் ஒரு வார காலத்திற்குள் விடுவித்து அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்தில் நடந்த திருத்தேர் குறித்த ஒரு அதிசயத்தை இந்த அவையிலே நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன். 1991 ஆம் ஆண்டு திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் திருத்தேர் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. 1991 என்றால் இன்றைய தினத்திற்கு கணக்கெடுத்து பார்த்தால் 35 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு திருநெல்வேலிக்கு சென்று வந்த போது அந்த தீக்கிரையான தேர் பற்றிய விவரம் அறிந்து, இந்த நெல்லையப்பர் திருக்கோயிலினுடைய வெள்ளி திருத்தேர் ஓராண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என்று அவர் பொது மேடையிலே அறிவிக்கின்றார். அதோடு இல்லாமல் இந்த ஆண்டு மீண்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அந்த வெள்ளி தேர் மக்கள் பயன்பாட்டிற்கு பவனி வரும் என்று அறிவித்தார். சொன்னதை செய்யும் முதல்வர் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக 35 ஆண்டுகளுக்கு முன்பு தீக்கிரையாக்கப்பட்ட வெள்ளி தேர் இன்றைக்கு திருவீதி உலா வருகிறது என்றால் தேர்களின் மன்னன் என்று போற்றப்படுகின்ற திராவிட மாடல் ஆட்சியில் தான் என்பதை உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டு, அவர் கோரிய திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்க 34 லட்சம் ரூபாய் உடனடியாக ஒதுக்கீடு செய்து அந்த திருக்கோயிலின் திருத்தேர் பாதுகாப்பிற்கு இந்த அரசும் அறநிலையத்துறையும் உதவிடும் என்பதனை பேரவைத் தலைவரின் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
