பெரம்பூர்: பெரம்பூர், சந்திரயோகி சமாதி சாலையில் சிஎம்டிஏ சார்பில் புதிதாக கட்டப்படும் திருமண மண்டபத்தின் இறுதிக்கட்ட பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் பேசுகையில், இந்தாண்டு தைப்பூச விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார். சென்னை பெரம்பூர், சந்திரயோகி சமாதி சாலையில், சிஎம்டிஏ சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ‘அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை’யின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இத்திருமண மண்டபத்தில் நடைபெறும் இறுதிக்கட்ட பணிகளை இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வில் மேயர் பிரியா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் மற்றும் முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மத்திய வட்டார மாநகராட்சி துணை ஆணையர் எச்.ஆர்.கவுசிக் உள்பட பலர் உடனிருந்தனர். பின்னர் அங்கிருந்த நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் தினக்கூலி, அரசுப் பணியில் இருப்பவர்கள் என பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களின் வீட்டு நிகழ்வுகளுக்கு மண்டபங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் சிரமங்களை அறிந்து, இதுபோன்ற திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக, கடந்த மாதம் 18ம் தேதி கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா திருமண மண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தற்போது இங்கு ரூ.20.50 கோடியில் கட்டப்பட்டு உள்ள இத்திருமண மண்டபத்தில், ஒரே நேரத்தில் 125 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில், 200ல் இருந்து 300 இருசக்கர வாகனங்கள், 60 கார்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 600 பேர் அமரும் வகையில் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்ட இத்திருமண மண்டபத்தை வரும் 29ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் 8 திருமண மண்டபங்கள், பிப்ரவரி 28ம் தேதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும். இந்தாண்டு தைப்பூச விழாவுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தைப்பூச விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் உணவு, குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, துரோகி எனக் கூறிவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி.தினகரன் இணைந்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளிக்கையில், பிரதமர் போன்றவர்கள் நாள்தோறும் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள். எனினும், இதுபோன்றவர்கள் எப்போதும் மைக்கின் முன்புதான் நின்றிருக்கின்றனர். இதுபற்றி அவர்களிடமே கேளுங்கள் என்று தெரிவித்தார்.
