கட்சியை கைப்பற்றி விடுவார் என்ற அச்சம்; அதிமுக மாஜி அமைச்சர்கள், நிர்வாகிகள் தினகரனுடன் தொடர்பில் இருக்க கூடாது: எடப்பாடி ரகசிய உத்தரவால் பரபரப்பு

 

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எடப்பாடியுடன் தொடர்பில் இருக்க கூடாது என்று கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி.தினகரனின் அமமுக நேற்று இணைந்தது. கூட்டணியில் இணைந்ததற்கு டிடிவிக்கு, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு டிடிவியும் நன்றி கூறினார். தேவைப்படும்போது எடப்பாடியை சந்திப்பேன் என்றும் தினகரன் தெரிவித்தார். ஆனாலும் அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகளுக்கு இந்த கூட்டணியில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தாமரை இலை தண்ணீர் போல் அவர்கள் உள்ளனர். இந்நிலையில், அதிமுக தலைமையில் இருந்து தென் மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு ஒரு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக நிர்வாகிகளுடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது.

குறிப்பாக டிடிவி.தினகரனை தொடர்பு கொண்டு முன்னாள் அமைச்சர்கள் பேசக்கூடாது. அதையும் மீறி அமமுக தலைமையுடன் தொடர்பில் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இதை கண்காணிக்க தனது ரகசிய டீம் ஒன்றையும் எடப்பாடி உருவாக்கியுள்ளாராம். இந்த டீம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே தினகரன் அதிமுகவில் இருந்த போது, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் தினகரனோடு நெருக்கமாக இருந்தார்கள். அந்த நெருக்கத்தை பயன்படுத்தி தினகரன் யாரையும், தன் பக்கம் இழுத்து விடக்கூடாது. இவ்வாறு நடந்தால், அதிமுகவை கைப்பற்ற தினகரன் திட்டமிடுவார். இதை தடுக்கவே எடப்பாடி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தலைமையே இப்படி உத்தரவிட்டால், சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு எப்படி ஒன்று திரண்டு பிரசாரம் செய்வது, வேட்பாளர்களை எப்படி வெற்றி பெற வைப்பது என்று அமமுகவினர் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக இணைந்தாலும் இருகட்சிகளுக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்த வண்ணம் உள்ளது. தினகரன் தனக்கு 14 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட்டுள்ளார். மேலும் அமமுகவுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்த பட்டியலையும் கொடுத்துள்ளார். இந்த பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் தொகுதிகளும் அடங்கும்.இந்த பட்டியலை எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி பாஜ மேலிடம் அனுப்பியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த எடப்பாடி, அமமுக கேட்கும் தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்க முடியாது. நாங்கள் ெகாடுக்கும் தொகுதிகளில் போட்டியிட சொல்லுங்கள் என்று கூறி உள்ளார். அதற்கு பாஜ மேலிடம், நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள். நாங்கள் கொடுத்த பட்டியலை உறுதி செய்யுங்கள் என உத்தரவு பிறப்பித்ததாக தெரிகிறது. இதனாலேயே ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில், கூட்டணியில் அமமுக இணையும் நிகழ்ச்சியை எடப்பாடி புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் எடப்பாடி இறங்கி போக கூடாது. அப்படி சென்றால், தங்களின் தொகுதிகள் பறிபோக கூடும் என்று முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியிடம் கூறி வருகின்றனராம். தொகுதிகள் ஒதுக்கும் போது இந்த விவகாரம் கூட்டணியில் பூதாகரமாக வெடிக்கலாம் என்றனர்.

 

Related Stories: