கண்ணூர்: ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் பந்து அத்வாலே நேற்று கேரள மாநிலம் கண்ணூர் வந்து இருந்தார். அவரிடம் கேரளாவுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அத்வாலே கூறுகையில்,‘கேரள முதல்வர் பினராயி விஜயன் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர வேண்டும். அப்படி செய்தால் ஒன்றிய அரசிலிருந்து மாநிலத்திற்கு அதிக நிதி கிடைக்கும்.
முதல்வர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால் அது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை. நிச்சயமாக கேரளாவிற்கு அதிக பணம் வரும். அந்தப் பணத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். பிரதமர் மோடி கேரளாவிற்கும் ஒரு பெரிய தொகுப்பை வழங்குவார்’ என்றார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது பேச்சை விமர்சனம் செய்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறுகையில்,‘ஒன்றிய அமைச்சர் அத்வாலேயின் கருத்துகள் ஜனநாயக விரோதமானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல்.
அனைத்து அரசியல் அமைப்பு நிறுவனங்களையும் ஆர்எஸ்எஸ் காலடியில் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதி. இந்த கருத்தை தெரிவித்த அமைச்சர் அத்வாலேவுக்கு கேரள அரசியல் புரியவில்லை. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரளாவுக்கு உரிமையுள்ள சுமார் 2 லட்சம் கோடி நிதி வழங்கப்படவில்லை’ என்றார்.
