மும்பை: பாலிவுட் நடிகை ரிமி சென் இந்தியாவில் வரிகள் அதிகம் என்று குற்றம் சாட்டி, துபாயில் ரியல் எஸ்டேட் தொழிலில் களமிறங்கியுள்ளார். இந்தியில் தூம், கோல்மால் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த பாலிவுட் நடிகை ரிமி சென், நீண்ட நாட்களாக திரையுலகில் தலைகாட்டாமல் இருந்தார். சமீபத்தில் இவரது முகம் மாறிப்போய் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள அவர், ‘நான் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யவில்லை. ஃபில்லர்ஸ் மற்றும் போடோக்ஸ் மட்டுமே பயன்படுத்தினேன்.
50 வயதிற்குப் பிறகு தேவைப்பட்டால் மட்டுமே முகத்தை அழகுபடுத்துவேன்’ என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் தற்போது நடிகை ரிமி சென் துபாயில் குடியேறி அங்கு ரியல் எஸ்டேட் தொழிலில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் தொழில் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. ஒன்றிய அரசு ஒரே இரவில் கொள்கைகளை மாற்றுகிறது. ஆயிரக்கணக்கான வரிகள் மற்றும் சிக்கல்கள் இருப்பதால் இந்தியா இனிமேல் வணிகத்திற்கு உகந்த நாடாக இல்லை. ஆனால் துபாயில் வர்த்தகம் செய்வது எளிதாகவும், முறையாகவும் உள்ளது’ என்று ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
