ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஒன்றிய அரசு அதிகாரிகளை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ராஜஸ்தானில் ஒன்றிய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முன்னதாக விசாரணை நடத்திய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணை நடத்தவும். வழக்கு பதிவு செய்யவும் முழு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு ஊழியர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மனுவானது நீதிபதிகள் ஜே.பி.பரதிவாலா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், ‘‘ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாநில போலீசாருக்கு முழு அதிகாரம் உள்ளது.

அதற்கு எந்தவித தடையும் கிடையாது. மேலும் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக சிபிஐயிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று திட்டவட்டமாக உத்தரவிட்ட நீதிபதிகள், ஒன்றிய அரசு அதிகாரியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: