பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையின் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் மாநில அரசு தயாரித்த ஆளுநரின் உரையில், ஒன்றிய அரசுக்கு எதிரான பல கூறுகள் இருந்ததால், ஆளுநர் உரை நிகழ்த்த மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் குழு சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கும்.
மாநில அரசு தயாரிக்கும் உரையை ஆளுநர் வாசிப்பார். ஆனால், ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு அமைந்த பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுடன் மோதல் போக்கை கைபிடித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் உரையாற்றும்போது அரசு தயாரித்த அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் இருப்பது, பாதியில் வெளியேறுவது போன்ற செயல்களில் ஆளுநர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்றுமுன்தினம் தமிழக சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளியேறினார். கேரள சட்டப்பேரவையில், அம்மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லிகர், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையில், ஒன்றிய அரசின் மீது தெரிவித்திருந்த கருத்துகளை படிக்காமல் தவிர்த்ததன் மூலம் பரபரப்பு ஏற்படுத்தினார். இந்தநிலையில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
இதில், ஆளுநர் தாவர்சந்த்கெலாட் உரையாற்ற வேண்டும். அதற்கான மாநில அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரை நகல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மாநில அரசு செயல்படுத்தி வரும் ஐந்து உத்தரவாத திட்டங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. அதே சமயத்தில் 15வது நிதி ஆணையத்தின் சிபாரிசு படி மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் இருப்பது,
மழை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகள் மேற்கொள்ள தேசிய பேரிடர் தடுப்பு நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டிய நிதி வழங்காமல் இருப்பது, சரக்கு மற்றும் சேவை வரியில் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய பங்களிப்பு வழங்காமல் இருப்பது, பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக ஒன்றிய அரசு பட்ஜெட்டில் அறிவித்தும், அந்த திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது,
ஒன்றிய அரசு செயல்படுத்தி வரும் தேசிய கல்வி கொள்கையை மாநில அரசு செயல்படுத்தாமல் இருப்பதால், ஒன்றிய அரசின் சார்பில் வழங்க வேண்டிய கல்வி நிதி வழங்காமல் இருப்பது, மற்றும் கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றிய அரசு செயல்படுத்தி வந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை நீக்கி விட்டு ‘‘விபி ஜி ராம் ஜி’’ என்று மாற்றி இருப்பதை ஆளுநர் உரையில் கடுமையாக விமர்த்திருப்பதாக தெரியவருகிறது.
இந்நிலையில் நேற்று மாநில தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், ஆளுநர் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசு தயாரித்த ஆளுநரின் உரையில், ஒன்றிய அரசுக்கு எதிரான பல கூறுகள் இருந்ததால், ஆளுநர் உரை நிகழ்த்த மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையான காரணம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட, மாநில சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் தலைமையிலான அமைச்சர்கள் குழு, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து அவரை சமாதானப்படுத்தி, சட்டப்பேரவையில் உரையாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தது. ஆளுநரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று அரசு தரப்பில் நம்பப்படுகிறது.
