புதுமுகங்களுக்கு ‘நோ’ பழைய முகங்களுக்கு ‘எஸ்’ எஸ்.பி. போடும் புதுகணக்கு: புலம்பும் ரத்தத்தின் ரத்தங்கள்

கோவை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்த முதற்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொறுப்பாளராக உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில், 18 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலில் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டிலேயே அதிமுக மண்ணை கவ்வியது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.பி.வேலுமணியின் முடிவிற்கு மாறாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை தேர்வு செய்தார். மேற்கு மாவட்டங்களில் அதிகமான புது முகங்களுக்கும், வாரிசுகளுக்கும் சீட் வழங்கினார். தேர்தல் முடிவுகள் வந்தபோது கோவை, பொள்ளாச்சி, நீலகிரி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதனால், சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பை தனக்கே தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம், எஸ்.பி. வேலுமணி காறார் காட்டி வருகிறாராம்.

மீண்டும் தனது பவரை காட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் எஸ்.பி.வேலுமணி, புது முகங்களுக்கு பதிலாக, ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளாராம். கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தோல்வி பயம் காரணமாக கோவை வடக்கு தொகுதியை தேர்வு செய்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதனால், கோவை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள அம்மன் அர்ச்சுணனுக்கு, மீண்டும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்காநல்லூர் தொகுதியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என கூறப்படுகிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி, கவுண்டம்பாளையம் தொகுதியில் பி.ஆர்.ஜி. அருண்குமார், மேட்டுப்பாளையம் தொகுதியில் ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன், சூலூர் தொகுதியில் கந்தசாமி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிணத்துக்கடவு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் செ.தாமோதரனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது.

பாஜ முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் இந்த தொகுதியை பெற கடுமையாக முயற்சித்தாலும், எஸ்.பி.வேலுமணியிடம் விட்டு தரும் எண்ணம் இல்லையாம். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் அதிமுக வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்கு காரணமான வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலத்திற்கு கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வால்பாறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைந்த நிலையில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசுவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி கட்சியில் மீண்டும் தலையெடுத்து விடக்கூடாது என்பதற்காக, அவருக்கு எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு வழங்ககூடாது என எஸ்.பி.வேலுமணி கணக்கு போட்டுள்ளாராம். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜவிற்கு 2 தொகுதிகளை மட்டுமே தர முடிவு செய்துள்ள எஸ்.பி.வேலுமணி, 8 தொகுதிகளில் அதிமுகவை போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளார். இதில் கிணத்துக்கடவு தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும், புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்காமல் பழைய நபர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதால், கட்சிக்காக உழைத்த அதிமுகவினர் பலர் கடுப்பில் இருக்கிறார்களாம்.

கட்சியில் மீண்டும் இணைந்த வடவள்ளி சந்திரசேகர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த சிங்கை ராமச்சந்திரன், அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோருக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோல பாஜவில் புதிதாக இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, பாஜ விவசாயிகள் அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்க எஸ்.பி.வேலுமணி விரும்பவில்லையாம். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், எந்த பணிகளையும் செய்யாமல் இருப்பதால், வாக்காளர்களிடம் எழுந்துள்ள அதிருப்தி அலையை மீறி வெற்றி பெறுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

அதேபோல, திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் மக்களிடம் ஏற்பட்டுள்ள ஆதரவு, கூட்டணி பலம், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வியூகம், சிறுபான்மையினர் வாக்கு வங்கி, தவெக பிரிக்கும் வாக்குகளை மீறி எஸ்.பி.வேலுமணியின் தேர்தல் கணக்கு சரியாக வருமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால், எஸ்.பி.வேலுமணியின் கணக்கு தப்புக்கணக்காகி, திமுக கூட்டணி கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் என ரத்தத்தின் ரத்தங்களே புலம்ப தொடங்கிவிட்டார்களாம்.

Related Stories: