பியூஷ் கோயல் முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமியை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் திடீர் திருப்பம்

சென்னை: எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி.தினகரன் மீண்டும் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறக்கிறது. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களின் கூட்டணி கட்சிகளை உறுதி செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றன.

குறிப்பாக, பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வெல்வதற்காக அதிமுக – பாஜ தரப்பில் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அன்புமணி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். அவரை தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று இக்கூட்டணியில் இணைந்துள்ளார். அவர் இணைந்தது அரசியல் களத்தில் பல்வேறு விமர்ச்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அதிமுக தலைமையை கைப்பற்றுவதே டிடிவி.தினகரினின் நோக்கமாக இருந்தது.

ஆனால், அந்த நோக்கம் எதுவும் நிறைவேறாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இந்த மோதல்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று சொல்லப்பட்டது. அதற்கேற்பதான் டிடிவியின் கருத்துக்கள் இருந்தது. ‘விஜய்யை கூவி கூவி கூப்பிட்டு பார்த்தார்கள். கரூர் சம்பவத்தை வைத்து பூச்சாண்டி எல்லாம் காட்டினார்கள். ஆனால் விஜய் உறுதியாக இருந்ததால், விரக்தியடைந்து விட்டார்கள். உண்மை என்றைக்கும் கசக்கும், துரோகம் என்றைக்கும் அதன் வேலையை காட்டும். ராயப்பேட்டையில் கடை வைத்திருப்பதை போல, ஜெயலலிதா படத்தை காட்டி கூட்டணிக்கு அழைக்கிறார்கள்,’ என்று எடப்பாடி பழனிசாமியை டிடிவி.தினகரன் காட்டமாக விமர்சித்திருந்தார்.

கடந்த ஆண்டு பசும்பொன்னில் நடந்த தேவர் குரு பூஜையில் பங்கேற்றிருந்த டிடிவி.தினகரன், ‘எங்களுக்கு எதிரி அதிமுக கிடையாது. எடப்பாடி பழனிசாமிதான் எங்களுடைய எதிரி. துரோக மனிதர் அவர்’என்றும் அவர் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனங்களை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவுவதற்கான சிக்னலையும் கொடுத்திருந்தார். இப்படி இருக்கையில் தான் நேற்று, தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் ஐக்கியமாகியிருக்கிறார். முன்னதாக, சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமையகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று காலை தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தமிழகம், புதுச்சேரி அமமுக மாவட்ட செயலாளர்கள் 80 பேருடன் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை, டிடிவி.தினகரன் சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், அதிமுக-பாஜ கூட்டணியில் அமமுக இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக இருவரும் வெளியிட்டனர். எடப்பாடி பழனிசாமியை டிடிவி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணையாமல், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து இணைந்திருப்பது தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே, அதிமுக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என்றும், எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றும் கடுமையாக விமர்ச்சித்து வந்தார். இந்நிலையில், பாஜ மேலிட தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசிய பின்பே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* தினகரனுக்கு எடப்பாடி வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவு: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து டிடிவி.தினகரன் பதிவிட்டுள்ளார்.

* பங்காளி சண்டைய ஒதுக்கி வச்சிட்டேன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பலம் சேர்த்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற விதத்தில், எங்களுடைய பங்காளி சண்டையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, விட்டு கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்ற சான்றோர் சொன்னதற்கேற்ப எல்லாவற்றையும் மறந்து தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணியில் இணைந்துள்ளோம். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற எங்கள் தொண்டர்கள் உழைப்பார்கள்,’’ என்றார்.

* ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் – பியூஷ் கோயல்
தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் டிடிவி.தினகரன் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தினகரன் அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதே என்னுடைய தந்தை உடன் இருந்தார். அதற்கு பிறகு அவருடைய பணிகள், தலைமை பண்பு உள்ளிட்ட அனைத்தையும் நான் பார்த்துள்ளேன். தற்போது எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட அனைவரும் கூட்டணியில் ஒன்று சேர்ந்துள்ளனர். நாங்கள் அனைவரும் குடும்பமாக ஒன்றிணைந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். தேசிய ஜனநாயக ககூட்டணி நல்ல ஆட்சியை கொடுக்கும், தமிழ் பெருமையை உலக அளவில் எடுத்து செல்லும். அதுமட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்,’’ என்றார்.

Related Stories: