சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வருகை தரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. ராமதாஸ், பிரேமலதா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் பிடிகொடுக்க மறுப்பதால் பாஜ மற்றும் அதிமுக தலைவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒற்றுமையாக நீடிப்பதால் இக்கூட்டணி வலுவாக இருக்கிறது. அதேநேரம் அதிமுக-பாஜ கூட்டணியில் யாரும் இணையாத நிலையில், பாஜ தலைமை, கூட்டணி விஷயத்தில் கடுமை காட்ட தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று மேடைக்கு மேடை அமித்ஷா வெளிப்படையாக பேசி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் அதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதனால் அதிமுக கூட்டணிக்குள் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடி நாளை சென்னை வருகை தர உள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், நாளை (வெள்ளிக்கிழமை) மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி வருகையால் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்றிவிட வேண்டும் என்பதில் பாஜ தலைமை தீவிரம் காட்டி வருகிறது. ஆனாலும் பல்வேறு கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் போனது பாஜ தலைவர்களை கடும் விரக்திக்குள்ளாக்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டக்கு தமிழகத்தில் அதிமுக தான் தலைமை என்று கூறி வரும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டாமல் எந்தவித முயற்சியும் எடுக்காமல் சிவனே என ஒதுங்கி இருப்பது பாஜ தலைமையை கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
அதிக தொகுதிகளை கேட்டு பாஜ அடம்பிடித்து வருவது எடப்பாடி பழனிசாமியின் கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், அன்புமணியை தொடர்பு கொண்ட பேசிய அமித்ஷா பாமக கூட்டணியை உறுதி செய்தார்.
இதை தொடர்ந்து பல்வேறு முக்கிய கட்சிகளை இணைக்க வேண்டும் என்று மோடி, அமித்ஷா தொடர்ந்து வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்து வருவது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், மோடி வருவதற்குள் கூட்டணியை இறுதி செய்திட வேண்டும் என்ற உத்தரவோடு தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னையில் முகாமிட்டுள்ளார். அவர் ஒவ்வொரு கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த ஒரு கட்சியும் பிடி கொடுக்காமல் ஓடி ஒளிந்து வருகின்றனர்.
இவ்வளவு முயற்சிகள் எடுத்த பின்பு ஒரு வழியாக டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். அதிமுகவை மீட்டெடுப்போம் என்ற கொள்கையுடன் கட்சி தொடங்கிய டிடிவி.தினகரன் தற்போது வரை அதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்காததால் அவருடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் எல்லாம் பல்வேறு கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இதனால் அமமுக கட்சிக்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் எந்தவித செல்வாக்கும் இல்லாத சூழ்நிலையே உள்ளது. தென்மாவட்டத்தில் அவர் சார்ந்த சமூகத்தில் ஒருதரப்பினர் ஆதரவு மட்டுமே இருப்பதால், மற்றவர்கள் வாக்குகள் அமமுகவுக்கு கிடைப்பது கடினம் என்ற சூழ்நிலையே காணப்படுகிறது.
ஓபிஎஸ்சை பொறுத்தவரை தற்போது தமிழக அரசியலில் தனி மரமாகி விட்டார் என்றே சொல்லலாம். அவருடன் இருந்த முக்கிய தலைவர்கள் எல்லாம் அவரிடம் இருந்து பிரிந்து சென்று திமுக, தவெக கட்சிகளில் இணைந்து விட்டனர். எக்காரணம் கொண்டும், அவரை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ஆனாலும் அவரிடம் பாஜ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தனிக்கட்சி ஒன்றை தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கு பணம் செலவாகும் என்பதால் அந்த கோரிக்கையை ஓபிஎஸ் ஏற்க மறுத்து வருகிறார்.
இதனால், சசிகலா உடன் இணைந்து தவெக கூட்டணியில் இணையலாமா? என்றும் ஆலோசித்து வருகிறார். இதனால் பாஜவின் பிடியில் ஓபிஎஸ் கூட சிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ராமதாசிடமும் பாஜ தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அன்புமணிக்கு எதிரான நிலைபாட்டில் இருக்கும் ராமதாஸ், பாஜ கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்றும் உறுதிபட கூறிவிட்டாராம். இதனால் ராமதாசை இழுக்கும் முயற்சியிலும் பாஜவுக்கு தோல்வியே கிடைத்துள்ளது. தேமுதிக உடன் கூட்டணி தொடர்பாக பாஜ பேசியுள்ளது. ஆனாலும் திமுகவுடன் கூட்டணி நிலைபாட்டில் இருப்பதால் பாஜ அழைப்பு விடுத்தும் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. பாஜவுக்கு, பிரேமலதாவும் பிடி கொடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
இப்படி பாஜ பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய கட்சிகள் எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மறுத்து வருவது பாஜ தலைவர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணியை இறுதி செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருவதற்குள் கூட்டணியை முடிவு செய்து விடலாம் என்று கணக்கு போட்ட பாஜ தலைமைக்கு பெரிய அளவிலான ஏமாற்றமே கிடைத்துள்ளது. எனவே, கூட்டணி தொடர்பான விஷயத்தில் பாஜ தலைவர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளது குறிப்பிடதக்கது. திமுக கூட்டணியை எதிர்க்கும் அளவுக்கு அதிமுக கூட்டணி பலம் இல்லாமல் இருப்பதும், பலர் கூட்டணி சேர பயந்து மறுத்து வருவதும் பாஜ மற்றும் அதிமுக தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
* அப்பாவை (ஓபிஎஸ்) அழைத்து வந்தால் சீட்
தமிழக அரசியலில் ஓபிஎஸ் தனி மரமாகி விட்டதால் அவருடன் இருந்த நிர்வாகிகள் பலர் வேறு கட்சிகளுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை வேகப்படுத்தி வரும் நிலையில், ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைவது, புதிய கட்சி தொடங்குவதா?, பாஜ கூட்டணிக்கு செல்வதா? என்ற முடிவையே இன்னும் எடுக்காததே ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கடும் அதிருப்திக்கு காரணமாக உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகம் வந்துள்ள தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை, ஓபிஎஸ்சின் மகனும், முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, தான் பாஜ கூட்டணியில் இணைவதாகவும், தனக்கு ஓரு சீட் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பியூஷ் கோயலோ, தனியாக வந்தால் சீட் ஓதுக்க முடியாது, அப்பாவையும் அழைத்து வர வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் அவருக்கு, எனக்கு என 2 சீட்களை ஒதுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பேருக்கு எல்லாம் சீட் ஒதுக்க முடியாது அவரை முதலில் கூட்டணிக்கு அழைத்து வரும் வேலையை பாருங்கள் என்று ரவீந்திரநாத்திடம் சொல்லி அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
