மும்பை: இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்தியாவில் முதல் ஒருநாள் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஏற்கனவே இந்தியாவில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்து மோசமான சாதனையை படைத்த இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரையும் இழந்து உள்ளதால் முன்னாள் வீர்ரகள் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது. தோல்வியில் இருந்து பாடங்கள் கற்று, பல இடங்களில் அணியை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பாசிட்டிவ் என பார்த்தால், கோலியின் பேட்டிங் எப்போதுமே அணிக்கு பலம்தான். 8வதாக களமிறங்கி ஹர்ஷித் ராணா சிறப்பாக பேட் செய்தார். இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, ரோகித் சர்மாவின் மோசமான பார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுப்மன் கில் கூறுகையில், ‘‘ரோகித் சர்மா மிக சிறப்பான பார்மில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியா தொடரில் இருந்தே அதேபோல் தென் ஆப்ரிக்கா தொடரிலும் அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் ஏற்கனவே கூறியதுபோல, கிடைக்கும் ஒவ்வொரு தொடக்கத்தையும் எப்போதும் பெரிய ஸ்கோர்களாக மாற்றுவது சாத்தியமில்லை. இந்த நியூசிலாந்து தொடரிலும் ரோகித் சில நல்ல தொடக்கங்களை பெற்றுள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக அந்த தொடக்கங்களை முழுமையாக பயன்படுத்தி அவற்றை சதங்களாக மாற்ற வேண்டும் என்பதே எப்போதும் ஆசையாக இருக்கும். ஆனால் அதை ஒவ்வொரு முறையும் செய்ய முடியாது’’ என்றார்.
* கோஹ்லியை பின்பற்றுங்கள்: கவாஸ்கர்
நியூசிலாந்து அணியுடனான தோல்வி குறித்து, முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறுகையில், ‘கோஹ்லி எந்த ஒரு குறிப்பிட்ட இமேஜூக்கும் கட்டுப்படாமல், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே அவரது வெற்றிக்கான ரகசியம். சில வீரர்கள் தங்களை பற்றிய எதிர்ப்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள். ஆனால், கோஹ்லி ரன்களை குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இளம் வீரர்கள் கோஹ்லியின் மன உறுதி மற்றும் ஆட்டத்தை முன்னெடுத்து செல்லும் விதத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியின் விளம்பில் இருந்தபோதும் விட்டுக்கொடுக்காமல் போராடும் அவரது கணம் பாராட்டுக்குரியது’ என்றார்.
பயிற்சியாளர் கம்பீரின் தோல்வி சாதனை
* 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோல்வி.
* முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி.
* 25 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி.
* 8 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தோல்வி.
* 47 ஆண்டுகளுக்கு பின் அடுத்தடுத்து சொந்த மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி.
* 10 ஆண்டுகளுக்கு பின் பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வி.
* 17 ஆண்டுகளுக்கு பின் அடிலெய்டில் ஒருநாள் போட்டியில் தோல்வி.
* 92 ஆண்டுகளில் 2வது முறையாக ஒருநாள் போட்டிகளில் 350க்கும் அதிகமான ரன்களை எடுத்தும் எதிரணியை வீழ்த்த முடியாமல் தோல்வி.
* முதல்முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்து எதிராக ஒருநாள் தொடரில் தோல்வி
* முதல்முறையாக இந்தூர் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் தோல்வி.
