மெல்பர்ன்: இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் நேற்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையா பெலாரசின் சபலென்கா, தரநிலை பெறாத பிரான்சின் ரஜோனாவை எதிர்கொண்டார். இதில் சபலென்கா 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் 12-ம் நிலை வீராங்கனையான உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா புக்சாவை எதிர்கொண்டார்.
இதில் ஸ்விடோலினா 6-4, 6-1 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, தரநிலை பெறாத துருக்கியின் ஜென்னெப் சான்மெஸை எதிர்கொண்டார். இதில் சான்மெஸ் 7-5, 4-6, 6-4 செட் கணக்கில் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி அசத்தினார். பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய உக்ரைன் வீராங்கனை கோஸ்ட்யுக் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஜாஸ்மின் பாலினி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தகுதி சுற்று வீராங்கனையான சான் நோவிச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரியா சகாரி (கிரீஸ்) வெற்றி பெற்றார். உலகத்தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் அல்கராஸ் ஆஸ்திரேலியாவின் வால்டனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அல்கராஸ் சுலபமாக 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் தொடக்க சுற்றில் கனடாவை சேர்ந்த கேப்ரியல் டியாலோவை எதிர் கொண்டார். இதில் சுவரேவ் 6-7 (1-7), 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 43 நிமிட நேரம் தேவைப்பட்டது.
* வீராங்கனைகளின் மனிதநேயம்
ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, துருக்கி தகுதிச்சுற்று வீராங்கனை சோன்மெஸ் போட்டியின் போது மைதானத்தில் பணியிலிருந்து பந்து எடுத்துக் கொடுக்கும் சிறுமி, வெயில் கொடுமையால் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக உதவிக்கு ஓடி வந்த சோன்மெஸ், சிறுமியை தாங்கிப்பிடித்து அமர வைத்தார். அலெக்ஸாண்ட்ரோவா மைதானத்தின் குளிர்சாதன பெட்டியிலிருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து ஒத்தடம் கொடுத்தார். இதனால் சிறிது நேரம் தடைபட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
