பெங்களூரு: விஜய் ஹசாரே கோப்பைக்கான இறுதி போட்டியில் நேற்று விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் விளையாடிய விதர்பா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதர்வா டைடே அற்புதமாக விளையாடி 118 பந்தில் 128 ரன்கள் (15 போர், 3 சிக்சர்) எடுத்தார். யாஷ் ரத்தோட் 54 ரன், அமன் மோக்டே 33 ரன் எடுத்தனர். சவுராஷ்டிரா தரப்பில் அதிகபட்சமாக பன்வார் 4 விக்கெட் எடுத்தார். 318 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா அணியில் பிரேரக் மங்காட் 88 ரன், சிராக் ஜனி 64 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 48.5 ஓவரில் 279 ரன்கள் மட்டுமே எடுத்து சவுராஷ்டிரா அணி ஆட்டமிழந்தது. இதன் மூலம் 38 ரன் வித்தியாசத்தில் விதர்பா அணி வென்றது. இந்த அணியில் யாஷ் தாகூர் 4, நாச்சிகேட் பூட் 3 விக்கெட் எடுத்தனர்.
