3வது ஒருநாள் போட்டியில் மிட்செல், பிலிப்ஸ் சென்ச்சுரி: தொடரை வென்றது நியூசிலாந்து; கோஹ்லி சதம், ரானா மிரட்டல் வீண்; போராடி தோற்றது இந்தியா

இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வென்ற நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக, கான்வே, நிக்கோலஸ் ஆகியோர் களம் இறங்கினர். அர்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில், நிக்கோலஸ் ரன் எதுவும் எடுக்காமல் போல்டானார். ஹர்சித் ரானா வீசிய அடுத்த ஓவரில் கான்வே (5), ரோகித் ஷர்மா கையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால் 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது. அடுத்து வந்த வில் யங், மிட்செல் இணை மெதுவாக ரன்களை சேர்த்தது. இதில் வில் யங் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல், பிலிப்ஸ் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினர். ஆட்டத்தின் 43.1 ஓவரில் அணியின் ஸ்கோர் 277 ஆக இருந்தபோது, இந்த ஜோடி பிரிந்தது. இவர்கள் 4வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடி 88 பந்தில் 106 ரன்கள் எடுத்த பிலிப்ஸ், அர்தீப் சிங் பந்தில் அவுட்டானார்.

மற்றொரு புறம் சிறப்பாக ஆடி வந்த மிட்செல், 131 பந்தில், 15 பவுண்டரி, 3 சிக்ஸருடன், 137 ரன்கள் குவித்து, சிராஜ் பந்தில் அவுட்டானார். அதனை தொடர்ந்து வந்தவர்கள் வரிசையாக அவுட்டாக, கேப்டன் பிரேஸ்வெல் மட்டும் அதிரடியாக விளையாடி 28 ரன் எடுத்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அர்தீப் சிங், ஹர்சித் ரானா தலா 3 விக்கெட்டுகளும், சிராஜ், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி களமிறங்கியது.ரோகித் சர்மா 11, கேப்டன் கில் 23, ஸ்ரேயாஸ் ஐயர் 3, கே.எல்.ராகுல் 1 ரன் என சொற்ப ரன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 159 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது. ஒரு பக்கம் நிதானமாக கோஹ்லி ஆடி வந்தார். அடுத்த நிதிஷ்குமார், கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். சிறப்பாக ஆடிய நிதிஷ்குமார் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஜடேஜா 12 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் வந்த ஹர்ஷித் ரானா, நியூசிலாந்து பவுலர்களை பந்தாடினார். 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசிய ரானா 43 பந்துகளில் 52 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 99 ரன்கள் சேர்த்தது. அடுத்த வந்த சிராஜ் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்ட, கோஹ்லி 124 ரன்னில் (10 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து, குல்தீப் யாதவ் 5 ரன்னில் ரன் அவுட்டாக 46 ஓவரில் 296 ரன்னில் இந்திய அணி ஆல் அவுட்டானது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து பந்துவீச்சில் ஃபூல்க்ஸ், கிளார்க் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

Related Stories: