மாமல்லபுரம்: தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு குவிந்தனர். இதனால், மாமல்லபுரம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. எந்த திசையில் பார்த்தாலும் மனித தலைகளே காணப்பட்டன. சென்னை புறநகர், தாம்பரம், காஞ்சிபுரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், உத்திரமேரூர் செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கட்டுச்சோற்றை கட்டி கொண்டு நேற்று காலை முதலே வரத் தொடங்கினர். தொடர்ந்து, கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும், பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர், கடந்த 2019ம் ஆண்டு வெண்ணெய் உருண்டை பாறை முன்பு கை உயர்த்திய இடத்தில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கடற்கரையில் மாமல்லபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைத்தனர். ஆனாலும், தடுப்புகளை தாண்டி பயணிகள் ஏராளமானோர் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்து குத்தாட்டம் போட்டனர். அதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கடற்கரை பகுதியில் வட்டமிட்டு அமர்ந்தும், மணலில் உற்சாகமாக நடந்தும் பெரியோர்கள் முதல் சிறுவர்கள் வரை ஆனந்தமாக துள்ளி குதித்து பொழுதை உற்சாகமாக கழித்தனர். குழந்தைகள் கடற்கரை மணலில் ஆனந்தமாக ஓடி பிடித்து விளையாடினர்.
ஒன்றிய தொல்லியல் துறை டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், சிலர் கம்பி வேலியை தாண்டி குதித்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க சென்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தொல்லியல் துறை பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் திணறினர். காணும் பொங்கலையொட்டி, மாமல்லபுரத்திற்கு அதிகமான பயணிகள் வருவார்கள் என முன்பே கணித்த மாமல்லபுரம் போலீசார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்களின் பேருந்துகளை புறவழிச்சாலையில் இடையூறு இல்லாமல் நிறுத்த ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து, கார் பைக் உள்ளிட்ட வாகனங்களை மட்டும் நகருக்கு உள்ளே அனுமதித்தனர்.
மேலும், பயணிகளின் சிரமத்தை குறைக்க மாமல்லபுரம் புறவழிச்சாலையில் இருந்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்பி சிபின் மேற்பார்வையில், மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, பயணிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர்.
தொடர்ந்து, பயணிகள் தங்களது உடமைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். மேலும், ஏராளமானோர் வாகனங்கள் வந்ததால் கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கடற்கரை செல்லும் சாலை, ஐந்து ரதம் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் விரைந்து மாற்றுப்பாதையில் வாகனங்களை வெளியேற்றினர். காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த பயணிகளால் சுற்றுலாத்தலம் களைகட்டி காணப்பட்டது.
