சென்னை: தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக சார்பில் முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், அனைவருக்கும் வீடு என திமுக அரசின் திட்டங்களையே வழிமொழிந்திருக்கிறார். திமுக திட்டங்களையே காப்பி அடித்துத் தேர்தல் வாக்குறுதியாகத் தந்திருக்கிறார். கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருவதால் ஒட்டுமொத்த பெண்களும் திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் அச்சமடைந்திருக்கும் பழனிசாமி, வெறும் குழப்பத்தையாவது ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மகளிருக்கு ரூ.2000 தருவதாகப் பொய்யாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ’வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்குச் சிறப்பு நிதி உதவியாகத் தலா ரூ.2,000 வழங்கப்படும்’ என 2019 பிப்ரவரி 12ம்தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த திட்டத்தை, தலைமைச் செயலகத்தில் வெறும் 32 பேரின் குடும்பங்களுக்கு மட்டும் வழங்கி தொடங்கியும் வைத்தார். ஆனால், யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. விடியல் பயணத்திட்டப் பேருந்துகளை “லிப்ஸ்டிக் பஸ்கள்” என கிண்டலடித்து, பெண்களைக் கொச்சைப்படுத்திய பழனிசாமியின் உதடுகள் தான், இப்போது பொய் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டிருக்கின்றன. தோல்வியை உணர்ந்து கொண்ட வெளிப்பாடு தான் பழனிசாமி வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
