சென்னை: நாங்குநேரில் 2 பேர் கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல், அப்பகுதியில் இருந்த அப்பாவி மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். போதையில் வந்த அந்த கும்பல், பயங்கர ஆயுதங்களை கொண்டு நடத்திய தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனனர்.
இந்த சம்பவம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தமிழக காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
