மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 63.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நீக்கத்தின் பின்னணியில் பா.ஜ-தேர்தல் கமிஷன் கூட்டணி உள்ளது. 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வென்ற சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 10,000 முதல் 30,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதை பாஜ தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜவுக்கு உதவும் வகையில் சிறப்பு தீவிர திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எனது தொகுதியான பவானிபூரின் உதாரணத்தை நான் உங்களுக்கு தருகிறேன். பவானிபூரில், 2.6 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். முன்ப தேர்தல் ஆணையம் 44,000 வாக்காளர்களை நீக்கியது. இந்த முறை, 2,000 வாக்காளர்களை நீக்கி, 14,000 பேரை வெயிட்டிங் லிஸ்ட் கீழ் வைத்துள்ளது. இந்த வாக்காளர்கள் ஏன் காணவில்லை?. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், வாக்காளர் பட்டியலில் ஒரே ஒரு வாக்காளர் மட்டுமே இருந்தாலும் பவானிபூரிலிருந்து நான் வெற்றி பெறுவேன். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. நான் அனைத்து சமூகங்கள், சாதிகள் மற்றும் மதங்களை மதிக்கிறேன்.
ஆனால் நான் எஸ்ஐஆர் பணியால் அதிருப்தி அடைந்துள்ளேன். மேற்குவங்காளத்தில் 1.2 கோடி மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் நிலையில் உள்ளனர். இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? நான் எந்த குறிப்பிட்ட சமூகம் அல்லது மதத்தைப் பற்றியும் பேசவில்லை. இந்த நாட்டின் ஒவ்வொரு உண்மையான வாக்காளருக்கும் வாக்காளராக இருப்பதற்கான தார்மீக உரிமை உள்ளது. ஆனால் இந்த பாரபட்சமான இந்திய அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் உதவியுடன் வாக்காளர் பட்டியலிலிருந்து மக்களை அழிக்க விரும்புகின்றன. இதை கண்டித்து மார்ச் 6ல் தர்ணா நடத்த உள்ளேன். மக்களுக்காகப் போராட எனக்கு தார்மீக ஆதரவை தாருங்கள். நான் என் வாழ்நாள் முழுவதும் போராடி வருகிறேன்.
மக்களுக்காகப் போராடி நான் இறக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் யாரையும் பயமுறுத்தலாம், ஆனால் எங்களை அல்ல. மக்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்கள் நிறுவனங்கள் மீது மட்டுமே உங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நீங்கள் மக்களின் உரிமைகளைப் பறிக்கிறீர்கள். நீதி அமைதியாக அழுகிறது. ஆனால் மனிதநேயம் மனிதாபிமானமற்ற தன்மையை தோற்கடிக்கும். நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். அனைவரும் நலமாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் நலமாக இருக்காவிட்டால் உலகம் இல்லாமல் போய்விடும். நாம் பிரித்து பாகுபாடு காட்ட மாட்டோம்; மக்களை ஒன்றிணைக்கிறோம். அதுதான் நமது பாரம்பரியம் மற்றும் பாரம்பரியம். எந்த தீய சக்திக்கும் முன்னால் நாம் தலைவணங்க மாட்டோம்’ என்றார்.
* அசாம் பா.ஜ எம்பிக்கு சட்டப்பேரவையில் சீட் முதல்வர் புது கணக்கு
அசாம் சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது பா.ஜவை ஹாட்ரிக் வெற்றியை பெற்றுவிட வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு அடியையும் அதற்கு ஏற்றார்போல் அவர் எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் கூட்டணி ஓட்டுகளை பிளவுபடுத்தக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும் அவர் விடுவதே இல்லை. அந்த வகையில் அவரது புதுக்கணக்கு அசாம் மாநிலங்களவை ராமேஸ்வர் டெலியை சட்டப்பேரவை தேர்தலில் களம் இறக்க உள்ளார். இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. வேட்பாளர் தேர்வு முடியவில்லை. ஆனால் துலியாஜன் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக எம்பி ராமேஸ்வர் டெலியை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிமுகம் செய்துள்ளார். துலியாஜன் தொகுதியில் தெரஷ் கோவல்லாவுக்குப் பதிலாக ராமேஸ்வர் டெலி போட்டியிடுவார் என்பதை தெளிவுபடுத்தினார்.
மேலும் பா.ஜவில் இணைந்த ஏஏஎஸ்யு தலைவர் சங்கர்ஜோதி பருவாவிற்கும் இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. இதுபற்றி ஹிமந்தா கூறுகையில், ‘அவருக்கு கட்சி சீட் வழங்கப்படாது என்பதை நான் ஏற்கனவே அவருக்குத் தெளிவுபடுத்தியிருந்தேன்’ என்று தெரிவித்துள்ளார். அசாம் மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தான் நடந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அசாம் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ சார்பில் தேராஷ் கோவல்லா மற்றும் ஜோகன் மோகன் ஆகியோரை பா.ஜ நிறுத்தி உள்ளது. இப்படி தேர்தல் வெற்றியை நோக்கி புதுக்கணக்கு போட்டு அடியெடுத்து வைத்து வருகிறார் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.
* தனி வழியில் ரங்கசாமி!
புதுச்சேரியில் தேர்தல் தேதி அறிவித்து, வேட்பு மனு தாக்கல் நிறைவுநாள் வரை வேட்பாளர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருப்பது ரங்கசாமி ஸ்டைல். கூட்டணியில் தொகுதி பங்கீடு வரை இன்னமும் நேரம் இருக்கிறது எனக்கூறி தலையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு தாமதப்படுத்துவார். கடைசியில் இழுத்த, இழுப்புக்கு பாஜவை வர வைத்துவிடுவார் ரங்கசாமி. அதேபோல் தனது கட்சியில் தொகுதிக்கு இரண்டு வேட்பாளர்கள் இருந்தாலும், உனக்குதான் சீட்டு வேலையைப்பார் எனக்கூறி 2 பேரையும் ஆசீர்வாதம் செய்து வைப்பார். இதனால் தொகுதிக்கு இரண்டு வேட்பாளர்கள் எனக்குத்தான் சீட்டு என கோஷ்டியாக தொகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் வேட்பாளர் யார் என்பது வேட்பு மனுத்தாக்கலில் ஏ பார்ம், பி பார்ம் கொடுக்கும் வரை யாருக்குமே தெரியாது. இப்படி தாமத அரசியல் செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகளில் சீட்டு கிடைக்காத விரக்தியில் என்.ஆர் காங்கிரசுக்கு ஓடி வருபவர்களை இருகரம் கூப்பி அழைத்து கட்டிப்பிடித்து கொள்வார். கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு போனால் நேரம் சரியில்லை, பிறகு பார்க்கலாம். பவுர்ணமி, அமாவாசை, பாட்டிமை, நவமி எனக்கூறுவார். முயற்சி செய்து, டயர்டாகிய பின்னர், வாங்க பேசலாம் என அழைப்பதுதான் அவரது வாடிக்கை.
எதிர்க்கட்சிகள் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போதுதான் என்.ஆர் காங்கிரஸ், வேட்பாளரே யார் என்று தெரியும். இந்த முறையும் தொகுதி பங்கீடு பேசலாம் என பாஜ அழைத்தும், இன்னும் தேர்தலே அறிவிக்கல, ஏன் அவசரப்படுறீங்க, பாத்துக்கலாம், பிறகு வாங்க எனக்கூறியுள்ளார். ரங்கசாமியை நன்கு புரிந்து கொண்ட பாஜ, அவரே கூப்பிடட்டும்பா, அவசரம் காட்ட வேண்டாம். அதான் கூட்டணியில் இருக்கிறேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறிவிட்டாரே, நமக்கு என்ன? என சைலண்ட் மோடில் இருக்கிறார்களாம்.
* என் பொண்டாட்டிக்கு சீட் கொடுக்காதீங்க! அமைச்சரின் கணவர் கெஞ்சல்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வீணா ஜார்ஜ் என்ற பெயர் மலையாள செய்தி சேனல்களை பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் தெரிந்திருந்தது. ஏனென்றால் இவர் கடந்த பல வருடங்களாக ஒரு மலையாள சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். கடந்த 2016ல் மார்க்சிஸ்ட் இவரை பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது. அரசியலுக்கு புதுமுகம் என்ற போதிலும் அந்தத் தேர்தலில் வீணா ஜார்ஜ் வெற்றி பெற்றார். பொதுவாக புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு மார்க்சிஸ்ட் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்காது.
ஆனால் கடந்த 2021ல் நடந்த தேர்தலிலும் வீணா ஜார்ஜுக்கு அதே ஆரன்முளா தொகுதியில் வாய்ப்பு கொடுத்தது. அந்த தேர்தலிலும் இவர் அமோக வெற்றி பெற்றார். அடுத்தடுத்து 2 தேர்தல்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு செல்வாக்கு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து வீணா ஜார்ஜுக்கு மிக முக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை வெற்றி பெற்றவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. ஆனால், அந்த நிபந்தனையை மீறி வீணா ஜார்ஜுக்கு இந்த முறையும் சீட் கொடுக்க சமீபத்தில் நடந்த மார்க்சிஸ்ட் பத்தனம்திட்டா மாவட்டக் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு மாநிலக் கமிட்டியும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் வீணா ஜார்ஜ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆரன்முளா தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய மனைவிக்கு இந்தத் தேர்தலில் சீட் கொடுக்க வேண்டாம் என்று அவரது கணவர் ஜார்ஜ் ஜோசப் மார்க்சிஸ்ட் மாவட்ட கமிட்டி தலைவர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் மார்க்சிஸ்ட் தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து விரைவில் இருவரையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் முடிவெடுக்க மார்க்சிஸ்ட் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
