சேலத்தில் பரபரப்பு சம்பவம் 5 பேருடன் கள்ளக்காதலால் பெண்ணை கொன்று எரிப்பு: வீட்டு அருகே புதைத்த கணவர், 18 வயது மகன் உள்பட 3 பேர் கைது

சேலம்: சேலத்தில் 5 பேருடன் கள்ளக்காதல் வைத்திருந்த பெண்ணை கொன்று எரித்து வீட்டின் அருகே புதைத்த கணவர், 18 வயது மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த கஸ்தூரிப்பட்டியை சேர்ந்தவர் தவசியப்பன் (45). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி கனகவல்லி (37). இவர்களுக்கு 20 வயதில் மகள், 18 வயதில் மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள பெரியம்மா மகன் மணிகண்டன் வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போதுபெரியம்மாவிடம், கனகவல்லியின் நடத்தை சரியில்லை என தந்தை தன்னிடம் பலமுறை கூறியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கனகவல்லி கடந்த 13ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக மணிகண்டன் வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த 15ம் தேதி ராசாத்தி தண்ணீர் பிடிக்கும்போது கனகவல்லியிடம் பேசியுள்ளார். பின்னர் 16ம் தேதி அவர் மணிகண்டன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு யாரும் இல்லை. அவர் மணிகண்டனுக்கும், கனகவல்லியின் மகனுக்கும் போன் செய்தபோது போதையில் உளறியுள்ளனர். இதனால் தங்கை கனகவல்லியை காணவில்லை என ராசாத்தி கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதில், தங்கை கனகவல்லிக்கு 22 ஆண்டுகளுக்கு முன் பழனிசாமி என்பவருடன் திருமணம் நடந்தது. அவரை பிரிந்து தவசியப்பனை 2வது திருமணம் செய்தார். பொங்கலை கொண்டாட வந்த கனகவல்லியை திடீரென காணவில்லை என தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கனகவல்லியை கொலை செய்து எரித்து புதைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரது கணவர் தவசியப்பன், 18 வயது மகன், ராசாத்தியின் மகன் மணிகண்டன் (22) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கனகவல்லி சங்ககிரியில் உள்ள விசைத்தறி கூடம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் வேலை செய்த திருச்செங்கோட்டை சேர்ந்த செந்தில் (40) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

தவசியப்பனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கனகவல்லியை அழைத்துவந்து மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர். ஆனால் கனகவல்லியால், கள்ளக்காதலன் செந்திலை பிரியமுடியவில்லை. இதுபற்றி மகனிடம் கூறி தன்னை செந்திலுக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். இதுகுறித்து மகன், தந்தை தவசியப்பனிடம் கூறி உள்ளார். மீண்டும் கள்ளக்காதலனுடன் கனகவல்லி சென்றால் அவமானமாகி விடும் என கருதிய இருவரும் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனிடையே சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அய்யன்கரட்டில் உள்ள அக்கா மகன் மணிகண்டன் வீட்டிற்கு வந்திருந்த கனகவல்லியிடம் கடந்த 15ம் தேதி இரவு 18 வயது மகன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி உள்ளனர்.

இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தநேரத்தில் மணிகண்டன் நண்பர்களான விஜயன் (22), சுரேஷ் (22) ஆகியோரை வரவழைத்துள்ளார். பின்னர் கனகவல்லியின் மகன் தாயை தாக்கி கழுத்தை அறுத்துள்ளார். விஜயன், சுரேஷ், மணிகண்டன் ஆகியோர் வயிற்றில் சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கனகவல்லி இறந்தார். பின்னர் இரவோடு இரவாக வீட்டின் பக்கத்தில் குழிதோண்டி உடலை எரித்து புதைத்துள்ளனர். தவசியப்பன் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி 4 பேரும் சேர்ந்து கனகவல்லியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. தறிப்பட்டறையில் வேலை செய்த 4 பேருடன் கனகவல்லிக்கு ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது.

இதனால் அடிக்கடி அவர் ஓட்டம் பிடித்துள்ளார். 5வதாக செந்திலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பலமுறை எச்சரித்தும் கண்டுக்கொள்ளாததால் கணவரும், மகனும் கனகவல்லியை தீர்த்துக்கட்டி உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்,
இதையடுத்து தவசியப்பன், அவரது 18 வயது மகன், மணிகண்டன் ஆகியோர், உடல் புகைப்பட்ட இடத்தை போலீசாரிடம் காட்டினர். இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மணிகண்டனின் கூட்டாளிகள் விஜயன், சுரேஷ் ஆகியோரை பிடித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வீட்டின் அருகில் எரித்து புதைக்கப்பட்ட கனகவல்லியின் உடலை இன்று காலை தோண்டி எடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: