வேலூர்: வேலூரில் சிஎம்சி டாக்டர் குடியிருப்பில் ஈடி சோதனையில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேலூர் வடக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த டாக்டர் மீது வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் காலை 8.30 மணியளவில் அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கினர். இரவு வரை சோதனை நீடித்த நிலையில் 2வது நாளாக நேற்றும் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் டாக்டர் அறையில் இருந்து போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை உதவி இயக்குனர் தலைமையிலான குழுவினர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சிஎம்சி டாக்டர் குடியிருப்பிற்கு வேலூர் வடக்கு சட்டம் ஒழுங்கு போலீசார், வேலூர் போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (என்ஐபி) போலீசாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் டாக்டர்கள் குடியிருப்புக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் அறையில் கைப்பற்றிய போதை பொருட்கள் தொடர்பாக விளக்கம் அளித்தனர். தொடர்ந்து போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: கேரளாவை சேர்ந்த டாக்டர் பிளிங்கின் 3 ஆண்டுகளாக சிஎம்சி அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வங்கி பண பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாக இருப்பதை அமலாக்க துறையினர் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாகவே சோதனை நடத்தினர். முன்னதாக டாக்டருக்கு தொலைபேசி மூலம் அமலாக்கதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர் இதுவரை வரவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள், மற்ற டாக்டர்களின் முன்னிலையில் டாக்டர் பிளிங்கின் அறையை உடைத்து சோதனையிட்டனர். அப்போது அறையில் நள்ளிரவு வரை நடந்த சோதனையில் 10 கிராம் மெத்தப்பட்டமைன், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த போதை பொருட்களை அவரே பயன்படுத்த ஆன்லைனில் வாங்கினாரா, அல்லது அதனை விற்பனை செய்கிறாரா, என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* டாக்டர் மீது கஞ்சா வழக்கு பதிவு
கேரளாவை சேர்ந்த டாக்டரின் அறையில் 2வது நாளாக அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் நேற்று டாக்டரின் பெயரில் ஆன்லைன் மூலம் பார்சல் வந்தது. அந்த பார்சலை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் டாக்டரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனதால், பார்சல் திருப்பி அனுப்பப்பட்டது. டாக்டர் தங்கியிருந்த அறையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய சாக்லேட், மேஜிக் காளான், 30 கிராம் கஞ்சா, மாத்திரை, பவுடர் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். கஞ்சா பறிமுதல் தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் டாக்டர் மீது 8சி 20பி என்டிபிஎஸ் ஆக்ட் பிரிவின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
