ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிர்ப்புறம் தனியார் லாட்ஜ், ஓட்டலும் செயல்படுகிறது. இதில், ஓட்டல் உரிமையாளரான ஈரோடு முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சுகுமார் (43) என்பவர் கடந்த 15ம் தேதி லாட்ஜ் உரிமையாளரான ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரிடம் குறைந்த வாடகைக்கு ரூம் கேட்டுள்ளார். ஆனால், லாட்ஜ் நிர்வாகத்தினர் தர மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளருக்கு ஆதரவாக, ஓட்டல் ஊழியர்களான ஈரோடு மேட்டுக்கடையை சேர்ந்த லோகநாதன் (36), தூத்துக்குடியை சேர்ந்த ராஜகுரு (31), சுகுமார் மகன் கவுதம் (21) ஆகியோர் லாட்ஜ் உரிமையாளரான சந்திரசகேர், லாட்ஜ் ஊழியர்களான ஈரோடு கனிராவுத்தர்குளத்தை சேர்ந்த செல்வம் மகன் நடராஜ் (27), நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (38), ஈரோடு நொச்சிக்காட்டுவலசை சேர்ந்த மாதேஸ்வரன் (65), அந்தியூர் குருவரெட்டியூரை சேர்ந்த தீபன் (30) ஆகியோரை அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து லாட்ஜ் உரிமையாளர் சந்திரசேகர், லாட்ஜ் ஊழியர்கள் ஓட்டலுக்குள் சென்று அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார் இரு தரப்பிலும் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து, ஓட்டல் உரிமையாளரான சுகுமார், லோகநாதன், ராஜகுரு ஆகிய 3 பேரையும், லாட்ஜ் ஊழியர்களான நடராஜ், கிருஷ்ணமூர்த்தி, மாதேஸ்வரன், தீபன் ஆகிய 4 பேர் என மொத்தம் 7 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில், தலைமறைவாக ஓட்டல் உரிமையாளர் மகன் கவுதமையும், லாட்ஜ் உரிமையாளரான சந்திரசேகரையும் போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக லாட்ஜ் உரிமையாளரான சந்திரசேகரை போலீசார் பிடித்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது, போலீசாரின் கவனக்குறைவால் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈரோடு டவுன் டிஎஸ்பி (பொறுப்பு) ஜெய்சிங், ஈரோடு தெற்கு போலீஸ் எஸ்ஐ தினேஷ், தலைமைக்காவலர்கள் முருகேஷ், பாஸ்கர், தனிப்பிரிவு தலைமைக்காவலர் அருண் ஆகிய 5 பேரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்பி சுஜாதா உத்தரவிட்டார்.
