பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை; அரியானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜிந்த்: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உடல் வலியுடன் வீட்டிற்கு அழுதுகொண்டே வந்தார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான யஷ்பால் என்பவர், பள்ளியின் புதிய அரங்கைச் சுற்றிக் காட்டுவதாகக் கூறி தன்னை குளியலறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் ஆபத்து நேரிடும் என மிரட்டியதாகவும் அந்தச் சிறுமி அழுதுகொண்டே கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு ஜிந்த் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சந்தர் ஹாஸ் முன்னிலையில் தீவிரமாக நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பை வழங்கினார். அதில், ‘பள்ளி மாணவிக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகத் தலைமை ஆசிரியர் யஷ்பாலுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர் கூடுதல் காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: