திருவனந்தபுரம்: பல்வேறு கடவுள்கள் மற்றும் தியாகிகளின் பெயர்களில் பதவிப்பிரமாணம் செய்த திருவனந்தபுரம் மாநகராட்சியை சேர்ந்த 20 கவுன்சிலர்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர். அப்போது பாஜ, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 20 கவுன்சிலர்கள் பல்வேறு கடவுள்களின் பெயர்களிலும், தியாகிகளின் பெயர்களிலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கவுன்சிலரான தீபக் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்த விவரங்கள் வருமாறு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி, கடவுள் பெயரால் அல்லது உளமாற என்று தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் சட்டமாகும். ஆனால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 20 கவுன்சிலர்கள் பல்வேறு கடவுள்களின் பெயர்களிலும், தியாகிகளின் பெயர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். எனவே மேரி பதவிப்பிரமாணம் எடுத்த இந்த கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி குஞ்சி கிருஷ்ணன் கூறியது: ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கடவுள்கள் இருக்கலாம். மனிதர்களையும், இறந்தவர்களையும் கூட அவர்கள் தெய்வமாக நினைக்கலாம். அது அவரவர் உரிமையும், விருப்பமும் ஆகும். அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் தங்களுக்கு விருப்பப்பட்ட தெய்வங்கள், மனிதர்கள் பெயரில் பதவிப் பிரமாணம் எடுக்க முடியுமா என்பது தீர்மானிக்க வேண்டிய விஷயமாகும். எனவே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்த 20 கவுன்சிலர்களின் பதவிப் பிரமாணம் செல்லுமா என்பது இந்த மனு மீதான தீர்ப்பை பொறுத்தே அமையும்.
தற்போதைக்கு இந்த 20 கவுன்சிலர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் கிடையாது. இவ்வாறு கூறிய நீதிபதி, 20 கவுன்சிலர்கள், கேரள அரசு, திருவனந்தபுரம் மாநகராட்சி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
