டெல்லி விரைந்த காங்கிரஸ் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா, ராகுல் இன்று ஆலோசனை: முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்

 

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்க எடுக்க உள்ளதாக கூறப்படுவதால் காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரது பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், அவை தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்ச்சனங்கள் எழுந்து வருகிறது. இதுபோன்ற பேச்சுக்களை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரசார் மத்தியில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கவும், அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கவும் தமிழக காங்கிரஸ் தலைமையின் முக்கிய தலைவர்களுக்கு டெல்லி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் முன்னாள் தலைவர்கள், காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அப்போது, தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து கட்சியினர் கருத்துகளை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Related Stories: