சிவகாசி: டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம விளைநிலங்களில் தற்பொழுது ராபி பருவத்திற்கு டிஜிட்டல் பயிர் சர்வே நடந்து வருகிறது. வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் வேளாண் வணிக வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர்அறுவடை பரிசோதனை பணியாளர்கள் இணைந்து டிஜிட்டல் பயிர் சர்வே பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு செல்போன் செயலி மூலம் விளைநிலங்களில் ஜிபிஎஸ் நிர்வகித்து வைத்து இதனை செயல்படுத்துகின்றனர். இந்த சர்வே மூலம் நில அமைவிடம், அதன் புகைப்படம் ஆகியவை துல்லியமாக பதிவேற்றப்படுகின்றன. வேளாண்மைத் துறையின் திட்டங்களை செயல்படுத்துவதிலும் குறிப்பிட்ட நிலபுலங்களில் உள்ள விவசாயிகள் என்ன பயிர் சாகுபடி செய்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் பாதிப்புகளை துல்லியமாக கணக்கீடு செய்வதற்கும், பயிர் கடன் வழங்குவதிலும், பயிர் காப்பீடு செய்வதிலும் எந்தெந்த பகுதிகள் தகுதியானவை என்பதை அறிவதிலும் இது உதவும். மேலும் நில புலன்களின் வரையறைக்கு ஏற்ப உரம், பூச்சி மருந்து எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்த முடியும்.
ஆகையால் டிஜிட்டல் பயிர் சர்வே பணியானது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்பணியினை மேற்கொள்வதற்கு தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கிராமங்களில் உள்ள ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் இப்பணிக்கு தேவைப்படுகிறார்கள்.
டிஜிட்டல் பயிர் சர்வே பணியை மேற்கொள்பவர்களுக்கு ஒரு சப் டிவிஷனுக்கு ரூ. 3 வீதம் அவர்கள் கணக்கீடு செய்யும் புல எண்களுக்கு ஏற்ப ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை முறை மூலம் வரவு வைக்கப்படும். அரசின் திட்டங்களுக்காக நடத்தப்படும் இந்த டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சர்வே பணியினை மேற்கொள்ளலாம்.
திருச்சுழி வட்டாரத்தில் மேலும் விவரங்களுக்கு ம.ரெட்டியபட்டி யூனியன் ஆபீஸ் வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையும் திருச்சுழியில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் தொடர்பு கொள்ளலாம். சிவகாசியில் உள்ளவர்கள் சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது 99528 88963 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராமசாமி, திருச்சுழி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் காயத்ரி தேவி தெரிவித்துள்ளனர்.
